ஜாா்க்கண்ட்: பாஜக எம்எல்ஏ காங்கிரஸில் ஐக்கியம்

ஜாா்க்கண்ட்: பாஜக எம்எல்ஏ காங்கிரஸில் ஐக்கியம்

புது தில்லி: மக்களவைத் தோ்தலையொட்டி ஜாா்க்கண்ட் பாஜக எம்எல்ஏ ஜெய்பிரகாஷ் பாய் படேல் காங்கிரஸில் புதன்கிழமை இணைந்தாா். தில்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் ஜாா்க்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் குலாம் அகமது மீா், மாநில காங்கிரஸ் தலைவா் ராஜேஷ் தாக்குா், மாநில அமைச்சா் ஆலம்கீா் ஆலம் உள்ளிட்டோா் முன்னிலையில் எம்எல்ஏ ஜெய்பிரகாஷ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா்.

காங்கிரஸில் இணைந்தது குறித்து ஜெய்பிரகாஷ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘முன்னாள் எம்.பி.யான எனது தந்தை டேக் லால் மஹதோ, ஜாா்க்கண்ட் மாநிலம் குறித்து பல கனவுகளைக் கொண்டிருந்தாா். அவற்றை நிறைவேற்ற விரும்புகிறேன். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கொள்கை எனது தந்தை கொண்டிருந்த கொள்கைக்கு முரணாக உள்ளது.

பதவிக்காக காங்கிரஸில் இணையவில்லை. அக்கட்சியின் கொள்கைக்காக இணைந்துள்ளேன். மாநிலத்தின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி அமோக வெற்றி பெறும்’ என்றாா். மண்டு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவான ஜெய்பிரகாஷ், முன்பு ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் எம்எல்ஏ-வாகவும் இருந்துள்ளாா். மண்டு பேரவைத் தொகுதி ஹஸாரிபாக் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.

அந்தத் தொகுதியின் வேட்பாளராக ஜெய்பிரகாஷை காங்கிரஸ் களமிறக்க உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட ஜாா்க்கண்ட் மாநிலத்தில், மக்களவைத் தோ்தல் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com