ராம நவமிக்குத் தயாராகும் அயோத்தி: பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு!

ஸ்ரீராம நவமியன்று பக்தர்களின் வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

ஸ்ரீ ராமபிரான் பிறந்த நாளான ஸ்ரீராம நவமி இந்தாண்டு ஏப்ரல் 17-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாட உள்ள நிலையில் அயோத்தி ராமர் கோயில் முழுவதும் விழாக்கோலம் பூண்ட வருகின்றது.

ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ஸ்ரீபால ராமர் சிலை பிரதிஷ்டை வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி தலைமை வகித்து சிலை பிரதிஷ்டையை நடத்திவைத்தார்.

அயோத்தி கோயில் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் நிறைவடைந்தும் திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்று பக்தர்கள் கூட்டம் சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் அயோத்தி ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைதந்த வண்ணம் உள்ளனர்.

ராமரின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் இந்து பண்டிகையான ராம நவமி இந்தாண்டு அயோத்தியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் ஸ்ரீராம நவமியன்று பிரதமர் மோடி வருகை தருவார் எனக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதனால், அயோத்தி நகரம் முழுவதும் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டு முதல் ராம நவமியைக் கொண்டாடவுள்ள நிலையில் ஏப்ரல் 17-ம் தேதி அயோத்தியில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பாஜக மிகப்பெரிய அளவிலான கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பக்திப் பாடல்கள், விளக்குத் திருவிழாக்கள், ராமர் சரித்திரம் ஓதுதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி பிரதமர் தனது பயணத்தின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் சிலை பிரதிஷ்டை பாஜகவின் வாக்குறுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் நிலையில், அது நிறைவேறியுள்ளது பல லட்சம் மக்களின் எதிர்பார்ப்பை இது பூர்த்தி செய்துள்ளது.

ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது வந்த பக்தர்கள் கூட்டத்தைப்போன்று ஸ்ரீராம நவமியன்று பக்தர்களின் வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசாவின் கோனார்க் கோயிலில் சூரிய ஒளி படுவதைப்போன்று, ஏப்ரல் 17-ம் தேதி நண்பகல் 12 மணியளவில் "சூரிய அபிஷேகத்தின்" போது கருவறையில் ராமர் சிலை மீது சூரிய ஒளி நேரடியாக விழுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

மேலும், அயோத்தி ராமர் கோயில் அஷ்டமி, நவமி, மற்றும் தசமி ஆகிய மூன்று நாள்களும் 24 மணி நேரமும் கோயில் திறந்திருக்க அதிகாரிகளுக்கு அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com