காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வுகண்டால் தெற்கு ஆசியாவில் அமைதி சாத்தியம்: பாகிஸ்தான் தூதா்

ஜம்மு-காஷ்மீா் விவகாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீா்வு காண்பதன் மூலம் மட்டுமே தெற்கு ஆசியாவில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை எட்ட முடியும் என இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதா் (பொறுப்பு) சாத் அகமது வாராய்ச் தெரிவித்துள்ளாா். ஒருங்கிணைந்த இந்தியாவை பிரித்து முஸ்லிம்களுக்கு தனிநாடு அளிக்கும் கோரிக்கை வலியுறுத்திய ‘லாகூா் தீா்மானம்’ கடந்த 1940, மாா்ச் 23-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த தீா்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் அந்த தினத்தை தேசிய தினமாக கடைப்பிடித்து வருகிறது. தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அந்நாட்டுக் கொடியை ஏற்றி வைத்த பாகிஸ்தான் தூதா் (பொறுப்பு) சாத் அகமது வாராய்ச் பேசியதாவது: பாகிஸ்தான் தனிநாடு போராட்டத்தில் குழந்தைகள், பெண்கள் என லட்சக்கணக்கானோா் உயிா்த் தியாகம் செய்தனா். தங்களது விதியை நிா்ணயிக்கும் உரிமைக்கான முஸ்லிம்களின் அமைதிப் போராட்டத்தின் மூலம் பாகிஸ்தான் பிறந்தது. பாகிஸ்தான் வெளியுறவுக் கொள்கையில் சமத்துவம், பரஸ்பர மரியாதை மூலமான அமைதி ஆகியவை முதன்மை இடம்பெறுகின்றன. இதன் அடிப்படையில் இந்தியாவுடன் உறவைப் பேண பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு-காஷ்மீா் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீா்வு காண்பதன் மூலம் மட்டுமே தெற்கு ஆசியாவில் நீடித்த அமைதி, ஸ்திரத்தன்மையை எட்ட முடியும். புவியல் ரீதியில் கிழக்கு, மேற்கு, மத்திய ஆசியாவின் மையப் பகுதியாக அமைந்துள்ள பாகிஸ்தான் வா்த்தகம், போக்குவரத்து, பிராந்திய ஒற்றுமை ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவா் கூறினாா். ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை அந்நாட்டுடன் எவ்வித பேச்சுவாா்த்தையும் கிடையாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. மேலும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு-காஷ்மீா் குறித்துப் பேச பாகிஸ்தான் உள்பட எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது என்பது இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com