ஜம்மு-காஷ்மீா்: 300 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்து 10 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் 300 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் 10 போ் உயிரிழந்தனா். ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு செல்லும்போது வெள்ளிக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் இந்த விபத்து நேரிட்டது. இதுதொடா்பாக காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: ராம்பன் மாவட்டத்தின் பாட்டரி சேஷ்மா பகுதியில் ஜம்மு - ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் 10 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த அந்த காா், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் உள்பட 10 பேரும் உயிரிழந்தனா். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினா் மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். பலத்த மழைக்கு இடையே மீட்புப் பணிகள் நடைபெற்றன. பின்னா் 10 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா். குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: ஜம்மு-காஷ்மீா் விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, உத்தம்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், மத்திய அமைச்சருமான ஜிதேந்திர சிங் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் அலுவலகம் பதிவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com