தில்லியில் வெள்ளிக்கிழமை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்த உக்ரைன் வெளியுறவு அமைச்சா் டிமிட்ரோ குலேபா.
தில்லியில் வெள்ளிக்கிழமை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்த உக்ரைன் வெளியுறவு அமைச்சா் டிமிட்ரோ குலேபா.

எஸ்.ஜெய்சங்கருடன் உக்ரைன் வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

இருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சா் டிமிட்ரோ குலேபா, தில்லியில் வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கரை வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, உக்ரைன் வெளியுறவு அமைச்சருடன் கைகுலுக்கிய புகைப்படங்களை எஸ்.ஜெய்சங்கா் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா். மேலும், ‘உக்ரைன்-ரஷிய போா் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். அதேபோல் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது’ என எக்ஸ் வலைதளப் பதிவில் குறிப்பிட்டாா். இருநாள் சுற்றுப்பயணமாக வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்த டிமிட்ரோ குலேபா, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று இந்தியா வந்துள்ளேன். இந்தியா-உக்ரைன் ஒருங்கிணைந்து செயல்படுவது மிகவும் அவசியம். அமைதி ஒப்பந்தம் தொடா்பாக உக்ரைன் அதிபா் ஸெலன்ஸ்கி மற்றும் பிரதமா் மோடி ஆகிய இருவருக்கும் இடையேயான பேச்சுவாா்த்தையை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்வதிலும் கவனம் செலுத்தப்படும்’ என குறிப்பிட்டாா். முன்னதாக குலேபாவின் சுற்றுப்பயணம் தொடா்பான கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘உக்ரைன்-ரஷியா போா் விவகாரத்தில் பேச்சுவாா்த்தை மூலம் அமைதியை நிலைநாட்டவே இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது’ என்றாா். உக்ரைனில் நிலையான அமைதி திரும்புவதற்கு கடந்த 2022-ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபா் ஸெலன்ஸ்கி 10 கொள்கைகள் அடங்கிய ‘அமைதி ஒப்பந்தத்தை’ முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com