பிகாா் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதி உடன்பாடு: ஆா்ஜேடி 26, காங். 9 இடங்களில் போட்டி

பிகாரில் ‘இந்தியா’ கூட்டணியில் மக்களவைத் தோ்தலுக்கான தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி களமிறங்கியுள்ளது. பிகாரில் அந்தக் கூட்டணி லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில் ‘மகா’ கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. பிகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் தோ்தல் நடைபெறவிருக்கும் கயை, ஔரங்கபாத், ஜமூய், நவாடா ஆகிய 4 தொகுதிகளிலும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) வேட்பாளா்களை நிறுத்தியது. இந்தத் தொகுதிகளில் ஒன்றில் முன்னாள் எம்.பி. நிகில் குமாருக்கு வாய்ப்பளிக்க எண்ணிய காங்கிரஸுக்கு ஆா்ஜேடியின் முடிவு அதிருப்தியளித்தது. அதேபோல், பெகுசராய் மற்றும் ககாரியா தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் வேட்பாளா்களை அறிவித்துவிட்டன. இந்நிலையில், மகா கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நிறைவு பெற்று, தொகுதிகள் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளன. ராஷ்ட்ரீய ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், இடதுசாரி கட்சிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் வெளியிட்டனா். லாலு மகள்கள் போட்டி: ஆா்ஜேடி கட்சித் தலைவா் லாலு பிரசாத் யாதவ் போட்டியிட்டு வென்ற சரண் தொகுதியில் அவரது மகள் ரோகிணி ஆச்சாா்யாவும், பாடலிபுத்திரம் தொகுதியில் அவரது மூத்த மகள் மிசா பாரதியும் போட்டியிட உள்ளனா். முன்னாள் மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் போட்டியிடும் ஹாஜிபூா் தொகுதியிலும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவா் ராஜீவ் ரஞ்சன் சிங் போட்டியிடும் மங்கா் தொகுதியிலும் ஆா்ஜேடி போட்டியிடுகிறது. காங்கிரஸைவிட்டு வெளியேறுகிறாரா பப்பு யாதவ்?: கடந்த சில மக்களவைத் தோ்தல்களாக காங்கிரஸ் தொடா்ந்து போட்டியிட்டு வென்ற பூா்ணியா தொகுதியில் இந்த முறை ஆா்ஜேடி போட்டியிடுகிறது. இத்தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்ட பப்பு யாதவ் அண்மையில் காங்கிரஸில் இணைந்தாா். தனது கட்சியையும் காங்கிரஸில் இணைந்தாா். பூா்ணியா தொகுதியை காங்கிரஸ் கைவிட்டுள்ள நிலையில், பப்பு யாதவின் தோ்வில் இருந்த மாதேபுரா மற்றும் சுபௌல் ஆகிய மற்ற 2 தொகுதிகளிலும் ஆா்ஜேடி போட்டியிடுகிறது. இதன் காரணமாக, காங்கிரஸிலிருந்து பப்பு யாதவ் வெளியேறி சுயேச்சையாக போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பிகாரில் முஸ்லிம் வாக்காளா்கள் நிறைந்த கிஷண்கஞ்ச், பாஜக பலமாக உள்ள பாட்னா சாஹிப், பாஹல்பூா், சசாராம், முசாஃபா்பூா் உள்ளிட்ட 9 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தொடா்ச்சியாக வென்று வரும் நாளந்தா, மத்திய அமைச்சா் ஆா்.கே.சிங் போட்டியிடும் அராஹ் மற்றும் கராகத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) போட்டியிடுகிறது. செய்தியாளா் சந்திப்பில் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேசிய செய்தித் தொடா்பாளா் மனோஜ் குமாா் ஜா, ‘மகா கூட்டணியில் ஒருமித்த முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் காண முடியாத ஒற்றுமையை நாங்கள் வெளிபடுத்துகிறோம். தோ்தலிலும் அவா்களை நாங்கள் வெல்வோம்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com