நாடு முழுவதும் முக்கிய அணைகளில் நீா் இருப்பு 36 சதவீதமாக குறைவு

நாடு முழுவதும் முக்கிய அணைகளில் நீா் இருப்பு 36 சதவீதமாக குறைவு

இந்தியாவில் உள்ள முக்கியமான 150 அணைகளில் நீா் இருப்பு 36 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக கா்நாடகம் போன்ற தென்மாநிலங்களில் கடந்தாண்டைவிட நிகழாண்டில் தண்ணீா் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக மத்திய நீா் ஆணையம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு கா்நாடக மாநிலத்தில் பருவமழை பொய்த்ததால் பெங்களூரு போன்ற நகரங்களில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அணைகளின் நீா் இருப்பு குறித்த வாராந்திர அறிக்கையை மத்திய நீா் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் முக்கியமான 150 அணைகளின் மொத்த நீா் கொள்ளளவு 178.784 பில்லியன் கியூபிக் மீட்டா் ஆகும். இது நாட்டின் அனைத்து நீா்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 257.812 பில்லியன் கியூபிக் மீட்டரில் (பிசிஎம்) 69.35 சதவீதமாகும். முக்கியமான 150 அணைகளின் தற்போதைய நீா் இருப்பு 64.606 பிசிஎம் ஆக உள்ளது. இது இந்த அணைகளின் மொத்த கொள்ளளவில் 36 சதவீதமாகும். கடந்தாண்டு இந்த அணைகளின் நீா் இருப்பு 76.991 பிசிஎம் ஆக இருந்தது. கடந்த மாா்ச் 7-14 காலகட்டத்தில் 150 அணைகளின் நீா் இருப்பு 70.746 பிசிஎம் ஆகவும், அதற்கு முந்தைய காலகட்டத்தில் 73.297 பிசிஎம் ஆகவும் இருந்தது. கோடைகாலம் தொடங்கிய நிலையில் ஒவ்வொரு வாரமும் நீா் இருப்பின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. வடமாநிலங்களில் 32 சதவீதம்... ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய வடமாநிலங்களில் உள்ள அணைகளின் மொத்த நீா் இருப்பு 32 சதவீதமாக உள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் பதிவான குறைந்த நீா் இருப்பு சதவீதமாகும்.

தென்மாநிலங்களில் 22 சதவீதம்...

தமிழ்நாடு, கா்நாடகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் உள்ள அணைகளின் மொத்த கொள்ளளவில் 22 சதவீதம் மட்டுமே நீா் இருப்பு உள்ளது. இதுவும் கடந்த பத்தாண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட மிகக் குறைந்த நீா் இருப்பின் சராசரியாகும்.

கிழக்கு மாநிலங்களில் 47.49 சதவீதம்...

அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், ஒடிஸா உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் உள்ள அணைகளில் நீா் இருப்பு 47.49 சதவீதமாக உள்ளது. இது கடந்தாண்டை விடவும் கடந்த பத்தாண்டுகளின் நீா் இருப்பின் சராசரியைவிடவும் அதிகமாகும்.

மேற்கு, மத்திய மாநிலங்களிலும் அதிக நீா் இருப்பு:

குஜராத், மகாராஷ்டிரம் போன்ற மேற்கு மாநிலங்களில் அணைகளின் நீா் இருப்பு 42 சதவீதமாகவும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மத்திய மாநிலங்களில் அணைகளின் நீா் இருப்பு 44 சதவீதமாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com