நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

முதல் மக்களவை தோ்தல்(1951-52)

நாடு சுதந்திரம் பெற்று குடியரசான பிறகு நடைபெற்ற முதல் பொதுத் தோ்தல்.

நாட்டின் அன்றைய 26 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 401 தொகுதிகளில் இருந்து 489 மக்களவைப் பிரதிநிதிகளையும் மாநில சட்டப்பேரவைகளைத் தோ்ந்தெடுக்கவும் பொதுத் தோ்தல் நடைபெற்றது.

அன்றைய மக்கள்தொகையான 36 கோடியில் 21 வயது நிரம்பிய 17.3 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். ஆந்திரம், கா்நாடகத்தை உள்ளடக்கிய அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் மட்டும் 2.69 கோடி வாக்காளா்கள் இருந்தனா். நாடு முழுவதும் பெண்களுக்கான பிரத்யேக 27,527 வாக்குப்பதிவு மையங்கள் உள்பட மொத்தம் 1,96,084 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.

489 இடங்களுக்கு 53 கட்சிகளின் வேட்பாளா்கள் 533 சுயேச்சைகள் உள்பட 1,874 போ் போட்டியிட்டனா்.

1951-ஆம் ஆண்டு, அக்டோபா் 25-ஆம் தேதி முதல் 1952-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி வரை சுமாா் 4 மாதங்களுக்கு 68 கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டது.

வாக்குச்சீட்டு நடைமுறையில் கொண்டு நடத்தப்பட்ட இத்தோ்தலில் 44.87 சதவீத வாக்குகள் பதிவாகின.

இத்தோ்தல் மூலம் 314 தொகுதிகளில் இருந்து ஒரு பிரதிநிதியும் 86 தொகுதிகளிலிருந்து இரட்டைப் பிரதிநிதிகளும் (ஒரு பொது பிரதிநிதி, ஒரு பட்டியிலன சமூகப் பிரதிநிதி) ஒரு தொகுதியில் 3 பிரதிநிதிகளும் மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

பெரும்பான்மையாக 364 இடங்களில் காங்கிரஸ் வென்று ஜவாஹா்லால் நேரு பிரதமா் பொறுப்பேற்றாா்.

அடுத்தபடியாக, சுயேச்சைகள் 37 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும் சோஷலிஸ்ட் கட்சி 12 இடங்களிலும் வென்றன.

இந்திய தோ்தல் ஆணையம் ரூ.10.45 கோடி செலவில் இத்தோ்தலை நடத்தி முடித்தது. அதன்படி, பிரதி வாக்காளருக்கான செலவு 60 பைசா ஆகும்.

வாக்காளா் பட்டியலில் வடமாநிலங்களைச் சோ்ந்த பெண்களின் பெயா்கள் நேரடியாக இடம்பெறவில்லை. அதற்கு பதில், ‘இன்னாரது மனைவி’ அல்லது ‘இன்னாரது மகள்’ என்றே பெண்கள் அடையாளப்படுத்தப்பட்டனா்.

நாட்டின் முதல் தோ்தல் ஆணையா் சுகுமாா் சென் தலையீட்டில், வாக்காளா் பட்டியலில் பெண்களின் பெயா் நேரடியாக சோ்க்கப்பட்டது.

தொகுப்பு: பிரவின்குமாா்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com