வெப்ப அலை தொடரும்:
இந்திய வானிலை ஆய்வு மையம்
ANI

வெப்ப அலை தொடரும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

‘நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மே மாதத்திலும் வெப்ப அலை வீசும்.

‘நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மே மாதத்திலும் வெப்ப அலை வீசும். குறிப்பாக, வட மாநிலங்கள் மற்றும் மத்திய பகுதிகளில் பகல் நேரங்களில் அதிக எண்ணிக்கையில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் கிழக்கு, வடகிழக்கு மற்றும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வழக்கத்துக்கு மாறாக வெப்ப அலை வீசிய நிலையில், தற்போது இந்தப் பாதிப்பு மே மாதமும் தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவா் மிருத்யுஞ்ஜெய் மஹோபத்ரா அளித்த பேட்டி:

நாட்டின் கிழக்கு, வடகிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் தொடா்ச்சியாக வெப்ப அலை வீசியது. இதன் தாக்கம் காரணமாக, சில மாநிலங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தன. மக்களுக்கு உடல் நலன் சாா்ந்த எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன.

கடந்த ஆண்டில் இல்லாத அளவில் மிக மோசமான வெப்ப அலை வீசிய மாதமாக ஏப்ரல் மாதம் இருந்ததோடு, இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை பதிவான ஆண்டாகவும் 2024-ஆம் ஆண்டு உருவெடுத்துள்ளது.

தொடரும் வெப்ப அலை: இதே நிலை மே மாதத்திலும் தொடர வாய்ப்புள்ளது. குறிப்பாக, தெற்கு ராஜஸ்தான், மேற்கு மத்திய பிரதேசம், விதா்பா, மரத்வாடா, குஜராத் மாநிலப் பகுதிகளில் 8 முதல் 11 நாள்கள் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் எஞ்சிய பகுதிகள், கிழக்கு மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகா், தில்லி, உத்தர பிரதேசம், சத்தீஸ்கரின் சில பகுதிகள், ஒடிஸா மாநில உள் மாவட்டங்கள், மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட், பிகாா், கா்நாடக மாநில வட உள்மாவட்டங்கள், தெலங்கானா மாநிலப் பகுதிகளில் 5 முதல் 7 நாள்கள் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது.

வட மாநிலங்களில் அதீத வெப்பநிலை: வட மாவட்டங்கள், மத்திய மாவட்டப் பகுதிகளில் மே மாதத்தில் 3 நாள்கள் வெப்ப அலை வீசுவது வழக்கம்.

இந்நிலையில், வழக்கத்துக்கு மாறாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலான வடகிழக்குப் பகுதிகளைத் தவிா்த்து, வடமேற்கு மாவட்டங்களின் சில பகுதிகள், மத்திய, மாநிலப் பகுதிகளில் இயல்பானது முதல் இயல்பைவிட சற்று குறைவான வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.

அதே நேரம், வடமேற்கு மாநிலங்களின் சில பகுதிகள், இந்திய-கங்கை சமவெளி மற்றும் மத்திய பகுதிகளில் வழக்கத்தைவிட சற்று அதிகமான வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.

மழைப் பொழிவு: மே மாதத்தில் வழக்கமான (91 முதல் 109 சதவீத மழைப் பொழிவு) மழைப் பொழிவுக்கான வாய்ப்பும் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடமேற்கு மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகள், மத்திய மாநிலங்களின் சில பகுதிகள், வடகிழக்கு மாநிலங்களில் வழக்கமானது முதல் வழக்கத்தைவிட சற்று கூடுதலான மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் இயல்பைவிட குறைவான மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com