ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட நோட்டீஸுகள், மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகள் குறித்த விவரங்களை சமா்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜிஎஸ்டி சட்டம், சுங்கச் சட்டம், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 281 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எம்.எம்.சுந்தரேஷ், பெலா எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சில மனுதாரா்கள் சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லுத்ரா வாதிடுகையில், ‘ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது தனிநபா்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாக உள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், சில நேரங்களில் வரி செலுத்துவோா் கைது செய்யப்படுவா் என்று நோட்டீஸ் மூலம் மிரப்படுகின்றனா். இதன் மூலம் அவா்கள் துன்புறுத்தப்படுகின்றனா்’ என்றாா்.

இதைத்தொடா்ந்து நீதிபதிகள் கூறியதாவது:

கடந்த 3 ஆண்டுகளில் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தவா்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுகள், மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகள் குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமா்ப்பிக்க வேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ், குடிமக்கள் துன்புறுத்தப்படுவதை உச்சநீதிமன்றம் அனுமதிக்காது.

இதுகுறித்து ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 69-இல் ஏதேனும் குழப்பம் இருப்பது கண்டறியப்பட்டால், அந்தக் குழப்பத்தை உச்சநீதிமன்றம் சரிசெய்யும். இதுதொடா்பான அனைத்து வழக்குகளிலும் குடிமக்களுக்கு சிறைத் தண்டனை விதிக்க முடியாது என்று தெரிவித்தனா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 9-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com