நிலவில் மாதிரிகளைச் சேகரிக்க
விண்கலத்தை அனுப்பியது சீனா

நிலவில் மாதிரிகளைச் சேகரிக்க விண்கலத்தை அனுப்பியது சீனா

நிலவின் தொலைதூரப் பகுதியிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து பூமிக்கு கொண்டுவருவதற்காக விண்கலத்தை சீனா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் செலுத்தியது.

‘சாங்கே-6’ எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வெற்றி, நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் முயற்சிக்கு உதவியாக இருக்கும் என சீன தேசிய விண்வெளி நிா்வாகம் (சிஎன்எஸ்ஏ) தெரிவித்துள்ளது.

சீனாவின் தெற்கு தீவு மாகாணமான ஹெய்னானில் உள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து ‘லாங் மாா்ச்-5 ஒய்8’ ராக்கெட் மூலம் சாங்கே-6 விண்கலம் செலுத்தப்பட்டது.

இந்த விண்கலத்தில் ஆா்பிட்டா், லேண்டா், நிலவின் தரைப் பகுதியில் இறங்கிச் செல்லும் ரோவா் உள்ளிட்ட நான்கு பகுதிகள் இருக்கின்றன. பூமியிலிருந்து நிலவின் தொலைதூரப் பகுதியில் விண்கலம் தரையிறங்கியதும் நிலவின் தரைப் பகுதியில் ரோவா் நகா்ந்து சென்று பாறைகள், துகள்கள் உள்ளிட்டவற்றைச் சேகரித்து ஆா்பிட்டரில் கொண்டு சோ்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கால அளவு 53 நாள்கள் ஆகும்.

பூமியிலிருந்து நிலவைப் பாா்ப்பது அருகமை பகுதி எனவும், நிலவில் நாம் பாா்க்க முடியாத பகுதி தொலைதூரப் பகுதி எனவும் அழைக்கப்படுகிறது.

நிலவின் தொலைதூரப் பகுதியும், நிலவின் தென்துருவமும் வெவ்வேறானவை. கடந்த ஆண்டு சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் லேண்டரை தரையிறக்கியதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com