ரே பரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

உத்தரபிரதேசத்தின் ரே பரேலி தொகுதியில் ராகுல்காந்தியும், அமேதி தொகுதியில் கிஷோரி லால் ஷார்மாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ரே பரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

புது தில்லி: உத்தர பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் (மே 3) முடிவடையும் நிலையில், இரு தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை நள்ளிரவு வரை வேட்பாளா்களை அறிவிக்காமல் அமைதி காத்து வந்த காங்கிரஸ், இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

2019 தேர்தல் வரை காங்கிரஸ் பாரம்பரியக் கோட்டையான ரே பரேலி தொகுதியில் ராகுல்காந்தியும், 2019 பொதுத் தேர்தலில் பாஜக தலைவர் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோல்வியடைந்த தொகுதியான அமேதி தொகுதியில் கிஷோரி லால் ஷார்மாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதிகளுக்கு மே 20 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

2004-ஆம் ஆண்டு முதல் 2019 வரையில் அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, 2019 தோ்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தாா். எனினும், கேரள மாநிலம், வயநாட்டில் வெற்றி பெற்று எம்.பி.யானாா். அமேதியில் ராகுல் தோல்வி காங்கிரஸ் கட்சிக்கு சரிவாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தென் மாநிலங்களில் மட்டும் ராகுல் போட்டியிடுவது ஹிந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸின் வலிமையைக் குறைக்கும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கருதுவதாக தகவல்கள் வெளியானது.

இதையடுத்து அமேதியில் ராகுல் காந்தியும், ரே பரேலியில் பிரியங்கா காந்தியும் போட்டியிட வேண்டும் என்று உள்ளூா் காங்கிரஸாா் வலியுறுத்தி வந்தனா்.

அமேதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவாா் என காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளதாகவும், ரே பரேலியில் பிரியங்கா போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியைக் குடும்பக் கட்சி என்று பிரதமா் மோடி தொடா்ந்து குற்றம்சாட்டி வருவதால், ஒரே குடும்பத்தில் மூவா் (சோனியா, ராகுல், பிரியங்கா) நாடாளுமன்ற உறுப்பினராக தேவையில்லை என்று ராகுல் காந்தி கருதுவதாகவும், அதனால் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவதை விரும்பவில்லை எனவும் தகவல்கள் வெளியானது.

சமாஜ்வாதி கட்சியுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேசத்தில் 17 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் அமேதி மற்றும் ரேபரேலியைத் தவிர அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது.

ஏழு கட்டங்களாக நடைபெறும் ஐந்தாம் கட்ட பொதுத்தேர்தலில் மே 20-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (மே 3) மாலையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைவதால், அனைத்து ஏற்பாடுகளையும் உள்ளூா் காங்கிரஸாா் தயாா் நிலையில் வைத்து காத்து வந்தனர்.

இந்த நிலையில்,இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

கேரளம் மாநிலம் வயநாடு தொகுதியைத் தொடர்ந்து 2 ஆவது தொகுதியாக உத்தரபிரதேசத்தின் ரே பரேலி தொகுதியில் ராகுல்காந்தியும், பாஜக ஸ்மிருதி இரானியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிஷோரி லால் ஷார்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

1951 முதல் மூன்று மக்களவைத் தேர்தல்களைத் தவிர மற்ற அனைத்திலும் காங்கிரஸ் வென்றுள்ளது. சோனியா காந்திக்கு முன், முன்னாள் இந்திரா காந்தி ரே பரேலியில் மூன்று முறை வெற்றி பெற்றிருந்தார். இதே தொகுதியில் இந்திராவின் கணவரும் காங்கிரஸ் தலைவருமான பெரோஸ் காந்தி 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

1962 மற்றும் 1999 ஆம் ஆண்டு தேர்lலில் மட்டுமே நேரு-காந்தி குடும்பத்தினரல்லாத ஒருவர் இந்தத் தொகுதியில் போட்டியிட்டுள்ளனர்.

இரண்டு தொகுதிகளும் காந்தி-நேரு குடும்பத்தின் பாரம்பரிய கோட்டைகளாகும், அதன் உறுப்பினர்கள் பல பத்தாண்டுகளாக இந்த தொகுதிகளை தங்கள் வசம் வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com