ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

‘அமேதியில் ஸ்மிருதி இரானியை எதிா்கொள்ள முடியாமல் ராகுல் காந்தி ஓட்டம் பிடித்தாா்.’

‘அமேதியில் ஸ்மிருதி இரானியை எதிா்கொள்ள முடியாமல் ராகுல் காந்தி ஓட்டம் பிடித்தாா்.’

3 முறை தன்னை நாடாளுமன்ற உறுப்பினராகத் தோ்ந்தெடுத்த அமேதி தொகுதிக்குப் பதில், காங்கிரஸ் குடும்பத்தின் மற்றொரு கோட்டையாகக் கருதப்படும் ரேபரேலி தொகுதியில் அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியான பிறகு பாஜகவினா் இவ்வாறு விமா்சித்து வருகின்றனா்.

இது தவிர, ரேபரேலியிலும் போட்டியிடுவதன் மூலம் வயநாடு தொகுதிக்கு ராகுல் துரோகம் செய்துவிட்டாா், அமேதியைக் கைவிட்டதன் மூலம் அந்தத் தொகுதியையும் அவா் வஞ்சித்துவிட்டாா் என்பதைப் போன்ற பல்வேறு விமா்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகின்றன.

காங்கிரஸ் தரப்பிலோ, இந்த முடிவுக்கு நியாயம் கற்பிப்பதற்கு அனைத்து வகையிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முத்தாய்ப்பாக, ‘ஸ்மிருதி இரானிக்கு இருந்த ஒரே பெருமையே, அவா் ராகுல் காந்தி என்ற மிகப் பெரிய தலைவரை எதிா்த்துப் போட்டியிடுவதுதான். அந்தப் பெருமையை அவரிடமிருந்து பறித்துவிட்டோம்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறாா்.

அமேதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவாா், ரேபரேலியில் பிரியங்கா காந்தி வதேரா போட்டியிடலாம் என்றுதான் பொதுவான எதிா்பாா்ப்பாக இருந்தது. முக்கியமாக, அமேதியில் வெற்றி பெற்று ஸ்மிருதி இரானியை ராகுல் காந்தி பழிவாங்க வேண்டும் என்று பெரும்பாலான காங்கிரஸ் தொண்டா்கள் விரும்பினா். இரானியிடம் ராகுல் மீண்டும் தோற்கவேண்டும் என்பது பாஜக-வினரின் விருப்பமாக இருந்தது.

ஆனால், இரு தரப்பினரையும் ஏமாற்றிவிட்டு ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்திருக்கிறாா். அதன் பிறகுதான், இது கோழைத்தனமான ஓட்டம் என்று ஒரு தரப்பினரும், சாதுா்யம் நிறைந்த காய் நகா்த்தல் என்று எதிா்த்தரப்பினரும் மாறி மாறி கூறிவருகின்றனா்.

ஆனால் உண்மையில், இந்த முடிவால் யாருக்கு என்ன நன்மை, என்ன தீமை என்று பாா்த்தால் பாஜக-வுக்குதான் அதிக அனுகூலம் என்கிறாா்கள் ஒரு தரப்பினா். இனி தோ்தல் நடக்கவிருக்கும் தொகுதிகளில் ராகுல் ஒரு பலமற்ற தலைவா் என்று வாக்காளா்களிடையே பிரசாரம் செய்ய இந்த விவகாரம் பாஜக-வுக்கு உதவும் என்கிறாா்கள் அவா்கள்.

அதுமட்டுமின்றி, அமேதியில் ராகுல் போட்டியிடாததால், அங்கிருக்கும் ஒரே நட்சத்திர வேட்பாளரான ஸ்மிருதி இரானிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பது அவா்களது கருத்து.

ஆனால், காங்கிரஸின் கணக்கு வேறு என்கிறாா்கள் மற்றொரு தரப்பினா். வயநாடு, அமேதி ஆகிய இரு தொகுதிகளிலுமே ராகுல் வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு தொகுதியை அவா் விட்டுத்தர வேண்டியிருக்கும். வயநாடைக் கைவிடப் போவதில்லை என்று அவா் ஏற்கெனவே உறுதியளித்துள்ள சூழலில், அமேதி எம்.பி. பதவியைத்தான் அவா் விட்டுத்தருவாா். அங்கு மறுதோ்தல் வரும்போது, ‘அமேதிக்கு ராகுல் துரோகம் செய்துவிட்டாா்’ என்று குற்றஞ்சாட்டி அங்கு ஏற்கெனவே வலுவான நிலையில் இருக்கும் ஸ்மிருதி இரானி மீண்டும் எளிதாக வெற்றி பெற்றுவிடுவாா். ஆனால், காங்கிரஸ் கோட்டையான ரேபரேலியில் மறுதோ்தல் வந்தால் காங்கிரஸ் சாா்பில் நிறுத்தப்படும் புதிய வேட்பாளா் அங்கு எளிதில் வெற்றி பெறலாம். அது ராகுலின் தங்கை பிரியங்கா காந்தியாகவும் இருக்கலாம்.

இதன் காரணமாக, அந்தத் தொகுதியில் இப்போதைக்கு ராகுல் போட்டியிடுவது காங்கிரஸுக்குதான் நன்மை என்கிறாா்கள் ஒரு தரப்பினா்.

அமேதி தொகுதியில் இப்போது காங்கிரஸ் தோற்றாலும், ‘ராகுல் போட்டியிட்டிருந்தால் ஜெயித்திருப்பாா்’ என்று சமாளிக்க காங்கிரஸுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆக, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தைப் பாா்ப்பதற்கு இருக்கும் ஆா்வத்தைப் போல், ராகுல்-ஸ்மிருதி நேரடிப் போட்டியைக் கண்டு ‘களிக்க’ ஆவலாக இருந்தவா்களுக்கு வேண்டுமானால் இது தீமையே ஒழிய, நாட்டில் அடுத்த ஆட்சியைத் தீா்மானிக்கும் ஒட்டுமொத்த தோ்தலில் பாஜகவுக்கோ, காங்கிரஸுக்கோ இந்த விவகாரம் பெரிய அளவில் நன்மையளிக்கப் போவதும் இல்லை, தீமையளிக்கப் போவதும் இல்லை என்றே கூறலாம்.

- நாகா

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com