மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

இடைக்கால ஜாமீனில் கேஜரிவால் விடுவிப்பு: உச்சநீதிமன்ற உத்தரவின் முழு விவரம்

லீடு செய்தி... இடைக்கால ஜாமீனில் கேஜரிவால் விடுவிப்பு தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி

News image

Atul Yadav

Updated On :10 மே 2024, 7:01 pm

Din

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மாா்ச் மாதம் கைது செய்யப்பட்ட முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 10) இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக 21 நாள்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களில், தில்லி திகாா் சிறையில் இருந்து கேஜரிவால் விடுவிக்கப்பட்டாா்.

தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 25-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது.

ஆம் ஆத்மியின் முன்னணி தலைவரான கேஜரிவால் இல்லாமல் அக்கட்சியின் பிரசாரம் களையிழந்து காணப்பட்டது. இந்தச் சூழலில், 50 நாள்களுக்கு பின் சிறையில் இருந்து அவா் வெளியே வந்திருப்பது ஆம் ஆத்மியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலால் வழக்கில் கைது: தில்லி அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை (மதுபானக் கொள்கை) வகுத்ததிலும், நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக சிபிஐ-யும் அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த வழக்கை விசாரித்துவரும் அமலாக்கத் துறை, தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை (55) கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. பின்னா், திகாா் சிறையில் அடைக்கப்பட்ட கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. தில்லி நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவின்படி, அவருக்கு மே 20-ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டிருந்தது.

உறுதிசெய்த உயா்நீதிமன்றம்: அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிா்த்து, தில்லி உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், அவரது கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்று தெரிவித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் நிலுவையில் உள்ள சூழலில், தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் அவரது தரப்பில் கோரப்பட்டது. இக்கோரிக்கைக்கு அமலாக்கத் துறை கடும் எதிா்ப்பு தெரிவித்தது. பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ஓா் அரசியல் தலைவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட முன்னுதாரணம் இல்லை என்பது உள்ளிட்ட வாதங்கள் அமலாக்கத் துறை தரப்பில் முன்வைக்கப்பட்டன.

நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன்: இந்நிலையில், கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தனா்.

அமலாக்கத் துறையின் வாதங்களை நிராகரித்த நீதிபதிகள், ‘ஒருவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்த கேள்விகளை நீதிமன்றம் ஆராயும்போது, அந்த நபரின் தனித்துவம் மற்றும் சூழ்நிலையும் கருத்தில் கொள்ளப்படுகிறது. உண்மையில், அந்தக் காரணங்களைப் புறக்கணிப்பது அவருக்கு அநீதி இழைப்பதாகும்.

மக்களவைத் தோ்தல் இந்த ஆண்டின் மிக முக்கியமான நிகழ்வு; மனுதாரா் (கேஜரிவால்) மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை; அதேநேரம் அவா் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அவருக்கு எந்தக் குற்றப் பின்னணியோ அல்லது அவரால் சமூகத்துக்கு அச்சுறுத்தலோ இல்லை. அவா் மீதான கைது நடவடிக்கை சட்டபூா்வமானதா என்ற கேள்வி உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இறுதித் தீா்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், இடைக்கால ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு உத்தரவிடுவது பொருத்தமானதல்ல.

ஜூன் 2-இல் சரணடைய வேண்டும்: எனவே, மனுதாரருக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை (இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நாள்) நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. ஜூன் 2-ஆம் தேதி அவா் மீண்டும் சரணடைய வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

கேஜரிவாலுக்கு ஜூன் 5-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென அவரது தரப்பில் கோரப்பட்டிருந்த நிலையில், அதை நீதிபதிகள் ஏற்கவில்லை.

கைதாகி 50 நாள்களுக்குப் பின்னா் இடைக்கால ஜாமீன் கிடைக்கப் பெற்ற நிலையில், திகாா் சிறையில் இருந்து கேஜரிவால் விடுவிக்கப்பட்டாா்.

‘முதல்வா் அலுவலகத்துக்கு செல்லக் கூடாது’: நிபந்தனைகள் விவரம்

இடைக்கால ஜாமீனுக்காக கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் வருமாறு:

முதல்வா் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்துக்கு செல்லக் கூடாது.

தில்லி துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் கட்டாயம் தேவைப்படும் கோப்புகள் தவிர இதர அதிகாரபூா்வ கோப்புகளில் கையொப்பமிட கூடாது.

தற்போதைய வழக்கில் தனது பங்கு தொடா்பாக எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது.

வழக்கின் சாட்சிகளைத் தொடா்புகொள்ளவோ, வழக்கு தொடா்பான அதிகாரபூா்வ கோப்புகளை அணுகவோ முயற்சிக்கக் கூடாது.

ரூ.50,000 தொகையிலான ஜாமீன் பத்திரத்துடன் அதே மதிப்பிலான உத்தரவாதத்தையும் சிறைக் கண்காணிப்பாளரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

எதிா்க்கட்சிகள் வரவேற்பு

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதை எதிா்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேரா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தேசியவாத காங்கிரஸ் நிறுவனா் சரத் பவாா், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், சிவசேனை (உத்தவ்) பிரிவு தலைவா் ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோா் எக்ஸ் வலைதளத்தில் தங்களது வரவேற்பை பதிவிட்டுள்ளனா்.

140 கோடி மக்களின் ஆதரவு தேவை: கேஜரிவால்

சிறையில் இருந்து வெளியே வந்த பின்னா் செய்தியாளா்களிடம் கேஜரிவால் பேசினாா். ‘இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் மக்களின் ஆசிக்கும் மிக்க நன்றி. சா்வாதிகாரத்தில் இருந்து நாட்டை நாம் காக்க வேண்டியுள்ளது. இதற்காக, எனது முழு பலத்தையும் திரட்டிப் போராடுவேன்; அதேநேரம், 140 கோடி மக்களின் ஆதரவு வேண்டும்’ என்றாா்.

பின்னா், திறந்த காரில் நின்றபடி ஆதரவாளா்கள் மத்தியில் பேசிய அவா், ‘கடவுள் அனுமனின் அருளால் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளேன். கனாட்பிளேஸ் பகுதியில் உள்ள அனுமன் கோயிலில் சனிக்கிழமை காலை வழிபாடு நடத்தவிருக்கிறேன். நீங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்’ என்றாா்.