மோடியின் நாடகங்கள் ஜூன் 4 -ல் முடிந்துவிடும்! : உத்தவ் தாக்கரே

சிவசேனை (யுபிடி) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, ”மோடியின் நாடகங்கள் ஜூன் 4 -ல் முடிந்துவிடும்” என்று பேசியுள்ளார்.
உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஐந்து கட்டங்களாக நடக்கிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு கட்ட வாக்குப்பதிவு வரும் மே 13, 20 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளன.

இந்த நிலையில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனைக் (யுபிடி) கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே செய்தியாளர்களுடன் பேசுகையில், "பாஜகவின் இந்துத்துவத்திற்கும், எங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. எங்களின் இந்துத்துவம் வீடுகளில் அடுப்புகளைப் பற்ற வைக்கும், ஆனால் பாஜகவின் இந்துத்துவமோ வீடுகளைப் பற்ற வைக்கிறது” என்று பேசினார்.

மேலும், தில்லி முதல்வர் கேஜ்ரிவாலின் கைது குறித்து பேசிய தாக்கரே, “மோடி அரசு கேஜ்ரிவாலின் அனைத்து அதிகாரங்களையும் பறித்துக் கொண்ட பின்னும் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. மோடியின் நாடகங்கள் அனைத்தும் ஜூன் 4 -ல் முடிந்துவிடும். அதன் பின்னர், பிரதமர் என்று அல்லாமல், வெறும் மோடி என்றே அழைக்கப்படுவார்” என்று கூறினார்.

“இந்த மோடியின் அரசு எங்களுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தியுள்ளது. எங்களின் வில்லையும் அம்பையும் பறித்து விட்டீர்கள். என் கட்சி, சின்னம், ஆட்களையும் நீங்கள் பறித்துக்கொண்டீர்கள். ஆனால் இன்னும் உத்தவ் தாக்கரேவைக் கண்டு பயப்படுகிறீர்களா மோடி?” என்றும் கேள்வி எழுப்பினார்.

உத்தவ் தாக்கரே
அமித் ஷாவை பிரதமராக்கவே மோடி பிரசாரம்: கேஜரிவால் பேச்சு

இஸ்லாமியர்கள் மக்கள்தொகை அதிகரித்துள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கையைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், “கடந்த பத்து ஆண்டுகளாக நரேந்திர மோடி பிரதமராக உள்ளார். இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அதிகரிப்பு சாதனையா, தோல்வியா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இஸ்லாமியர்கள் மக்கள்தொகை அதிகரிப்பை பாராட்டுவதா, விமர்சிப்பதா என்று அனைவருக்கும் குழப்பமாக உள்ளது” என்றார்.

மேலும், “அதானி, அம்பானியிடம் ராகுல் காந்தி டெம்போ நிறைய பணம் வாங்கியதாகப் பேசினீர்கள். உங்களுக்குத் தோன்றுதை எல்லாம் உளறுகிறீர்கள் மோடி. நீங்கள் ஒரு பிரதமர். உங்களுடைய அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, உளவுத்துறை எல்லாம் காங்கிரஸ் டெம்போவில் பணம் வாங்குகையில் என்ன செய்து கொண்டிருந்தன? காங்கிரஸ் கருப்புப் பணம் வாங்குவது பிரதமருக்குத் தெரிந்தால், அவரின் அதிகார அமைப்புகள் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றன?

இந்துக்கள், இஸ்லாமியர்கள் குறித்து பாஜகவினர் பேசும்போதெல்லாம், இத்தகைய நபர்களிடம் அதிகாரத்தைக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் பயன்படுத்தும் வார்த்தைகள் மூலம் பிரதமர் பதவியின் மதிப்பை மோடி குறைத்து வருகிறார். நாட்டின் பெயரும் இதனால் கெடுகிறது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள் மோடி. பதஞ்சலி எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் கொண்டு ஓய்வெடுங்கள். நாட்டை நாசப்படுத்தாதீர்கள்” என்று பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com