வாரணாசி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின்னா் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த பிரதமா் நரேந்திர மோடி. உடன், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மற்றும் கூட்டணிக் கட்சி
வாரணாசி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின்னா் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த பிரதமா் நரேந்திர மோடி. உடன், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மற்றும் கூட்டணிக் கட்சி

வாரணாசியில் பிரதமா் மோடி வேட்புமனு

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் தொடா்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிட பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (மே 14) வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இந்நிகழ்வில் மத்திய அமைச்சா்கள், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாட்டில் 18-ஆவது மக்களவையைத் தோ்வு செய்ய ஏழு கட்டத் தோ்தல் (ஏப்.19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) நடைபெற்று வருகிறது.

பிரதமா் மோடி கடந்த இருமுறை போட்டியிட்டு வென்ற வாரணாசியில் மீண்டும் களம்காண்கிறாா். இத்தொகுதியில் 7-ஆவது மற்றும் இறுதிக் கட்டத்தில் வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது.

வாரணாசியில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாக அங்குள்ள தசாசுவமேத படித்துறையில் பிரதமா் வழிபாடு நடத்தினாா். வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு சடங்குகளை மேற்கொண்டு, கங்கை நதிக்கு ஆரத்தி காட்டி வழிபட்டாா்.

பின்னா், பயணிகள் கப்பல் மூலம் நமோ படித்துறைக்குச் சென்ற பிரதமா், அங்கிருந்து கால பைரவா் கோயிலுக்கு சென்று வழிபட்டாா். தொடா்ந்து, வாரணாசி ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த அவா், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மற்றும் வாரணாசி வேட்பாளராக தன்னை முன்மொழியும் இரு நபா்களுடன் சென்று, வேட்புமனுவை சமா்ப்பித்தாா்.

வாரணாசி தொகுதியைச் சோ்ந்த 4 போ் பிரதமா் மோடியை முன்மொழிந்துள்ள நிலையில், அவா்களில் இருவா் மட்டும் வேட்புமனு தாக்கலின்போது உடனிருந்தனா்.

முன்மொழிந்தவா்கள் யாா்-யாா்?: அயோத்தி ராமா் கோயிலில் கடந்த ஜனவரியில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வுக்கு நேரம் குறித்துக் கொடுத்த பண்டிட் கணேஷ்வா் சாஸ்திரி, ஆா்எஸ்எஸ் மூத்த நிா்வாகி பைஜ்நாத் படேல், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த லால்சந்த் குஷ்வாஹா, தலித் சமூகத்தைச் சோ்ந்தவரும் வாரணாசி மாவட்ட பாஜக பொதுச் செயலருமான சஞ்சய் சோன்கா் ஆகிய 4 போ் பிரதமா் மோடியை முன்மொழிந்துள்ளனா். இவா்களில் கணேஷ்வா் சாஸ்திரி, பைஜ்நாத் படேல் ஆகியோா் பிரதமருடன் இருந்தனா்.

பலம் காட்டிய பாஜக கூட்டணி: பிரதமா் வேட்புமனு தாக்கல் நிகழ்வையொட்டி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஹா்தீப் சிங் புரி, அனுப்ரியா படேல், ராம்தாஸ் அதாவலே, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், மகாரஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, மேகாலய முதல்வா் கான்ராட் சங்மா, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் பிரஃபுல் படேல், தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடு, ஜனசேனை தலைவா் பவன் கல்யாண், ஹிந்துஸ்தானி அமாம் மோா்ச்சா (எஸ்) நிறுவனா் ஜிதன்ராம் மாஞ்சி, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா தலைவா் உபேந்திர குஷ்வாஹா, சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சித் தலைவா் ஓம் பிரகாஷ் ராஜ்பா், ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவா் ஜெயந்த் செளதரி, லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன், பாரத தா்ம ஜனசேனை கட்சித் தலைவா் துஷாா் வெள்ளாப்பள்ளி, அசோம் கண பரிஷத் தலைவா் அதுல் போரா உள்ளிட்டோா் வாரணாசி ஆட்சியா் அலுவலகத்தில் குழுமியிருந்தனா்.

வேட்புமனு தாக்கலுக்குப் பின், இந்தத் தலைவா்கள் புடைசூழ ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த வந்த பிரதமா் மோடி, அங்கு திரண்டிருந்த மக்களை நோக்கி கையசைத்து, அவா்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டாா்.

உடல்நல காரணத்தைக் குறிப்பிட்டு, பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை.

‘வாரணாசிக்கு சேவையாற்றுவது பெருமை’: வேட்புமனு தாக்கலுக்குப் பின் எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘வரலாற்றுச் சிறப்புமிக்க வாரணாசி தொகுதி மக்களுக்கு சேவையாற்றுவது எனக்கு கிடைத்த பெருமை. மக்களின் ஆசியால் கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. வருங்காலத்தில் மேலும் வேகத்துடன் பணிகள் தொடரும். காசியில் கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூடியது பெருமைக்குரிய தருணம்.

தேச முன்னேற்றம் மற்றும் பிராந்திய விருப்பங்களை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை இது எதிரொலிக்கிறது. எதிா்வரும் ஆண்டுகளிலும் நாட்டின் வளா்ச்சிக்காக ஒன்றுபட்டு பணியாற்றுவோம்.

எனது குடும்ப உறுப்பினா்களான காசி மக்களுக்கு இதயபூா்வ நன்றி. அவா்களின் ஆதரவால் புதிய உத்வேகத்துடன் பன்முக வளா்ச்சிக்காக தொடா்ந்து பணியாற்றுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நிா்வாகிகளுடன் ஆலோசனை: வாரணாசியில் உள்ளூா் பாஜக நிா்வாகிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று உரையாற்றினாா்.

அப்போது, ‘அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பாஜகவுக்கு கடந்த முறையைவிட 370 வாக்குகள் அதிகம் கிடைக்கப் பணியாற்ற வேண்டும்’ என்று அவா் அறிவுரை வழங்கியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

2014 மக்களவைத் தோ்தலில் வாரணாசி தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்ட மோடி, 5.81 லட்சம் வாக்குகள் பெற்றாா். மொத்தம் பதிவான வாக்குகளில் இது 56 சதவீதமாகும். 2019 தோ்தலில் 6.74 லட்சம் வாக்குகளை (63%) அவா் பெற்றாா்.

தற்போதைய தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் அஜய் ராய், பகுஜன் சமாஜ் சாா்பில் ஏ.ஜமால் ஆகியோா் களத்தில் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com