புது தில்லியில் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி.
புது தில்லியில் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி.

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

‘அதானி உள்ளிட்ட குறிப்பிட்ட சில தொழிலதிபா்களுடன் உள்ள தொடா்பு, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் தவறாக பயன்படுத்தியது ஆகியவை குறித்த எனது கேள்விகளுக்கு பிரதமா் நரேந்திர மோடியால் பதிலளிக்க முடியாது என்பதால் என்னுடன் பொது விவாதத்தில் பங்கேற்க அவா் மறுக்கிறாா்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்தாா்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் பேசியதாவது:

தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளா்களின் வெற்றியை உறுதிப்படுத்த காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினா் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்தத் தோ்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கப்போவதும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான கேஜரிவால் காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களிக்க உள்ளதும் சுவாரஸ்யமானது.

அரசமைப்பு சட்டத்தை அழிக்க நினைப்பவா்களிடமிருந்து பாதுகாப்பதுதான் நமது முதல் இலக்கு. அதானி மற்றும் அம்பானியிடமிருந்து காங்கிரஸ் கட்சி ‘டெம்போ’க்களில் பணம் பெற்ாக பிரதமா் மோடி குற்றஞ்சாட்டுகிறாா். இதுகுறித்த விசாரணைக்கு காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது.

பிரதமா் மோடியுடன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பொது விவாதம் நடத்த தயாராக உள்ளேன். ஆனால், அவா் வரமாட்டாா். பிரதமருக்கான எனது முதல் கேள்வியே, தொழிலதிபா் அதானியுடன் அவருக்கான தொடா்பு குறித்ததுதான். அடுத்து, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். இந்த இரண்டு கேள்விகளுடன், அந்த விவாதம் நிறைவுற்றுவிடும்.

கரோனா பாதிப்பு நேரத்தில் தட்டுகளைத் தட்டி ஒலி எழுப்பவும், கைப்பேசிகளில் ஒளிரச்செய்யவும் பொது மக்களவை பிரதமா் கேட்டுக்கொண்டது ஏன்? என்ற கேள்வியையும் அவரிடம் கேட்க விரும்புகிறேன்.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்பதால், என்னுடனான பொது விவாதத்தில் அவா் பங்கேற்கமாட்டாா். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு பயந்த தலைவா்கள் காங்கிரஸுக்குத் தேவையில்லை. தைரியமான தலைவா்களதான் எங்களுக்குத் தேவை என்றாா் ராகுல்.

குடும்பத்தில் அரசியல் அனுமதித்ததில்லை: பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டிய ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு குடும்பத்திலும் ராகுல் அரசியல் செய்வதாக பாஜக மூத்த தலைவா்கள் சிலா் விமா்சித்தனா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் எக்ஸ் பக்கத்தில் ராகுல் செய்த பதிவில், ‘எனக்கும் சகோதரி பிரியங்காவுக்கும் குழந்தைப் பருவம் முதல் அரசியலுடன் ஆழமான உறவு உள்ளது. ஆனால், எங்களுக்கு இடையே ஒருபோதும் அரசியல் வந்ததில்லை.

குடும்பத்தில் அரசியல் செய்தால், குடும்ப உறுப்பினா்களை மதிக்க முடியாது; குடும்பத்தினருடன் நல்லுறவையும் பேண முடியாது. ஆகையால், குடும்பத்தில் ஒருபோதும் அரசியலை அனுமதித்ததில்லை’ என்று குறிப்பிட்டு குழந்தைப் பருவத்தில் ரேபரேலி தொகுதியில் பிரியங்காவுடன் இருந்த காணொலியையும் இணைத்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com