மேக்கேதாட்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை: காவிரி ஆணையத்தில் தமிழகம் எதிர்ப்பு

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்.

நமது சிறப்பு நிருபர்

புது தில்லி: காவிரிப் படுகையில் கர்நாடகம் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணை மற்றும் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசின் தடுப்பணைக்கு எதிராகப் போராடும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் உள்ளிட்ட 8 விவகாரங்களை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு எழுப்பியது.

30-ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் (சி.டபிள்யு.எம்.ஏ.) அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் தில்லியில் நடைபெற்றது. தமிழக அரசின் உறுப்பினரான நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்úஸனா, தமிழக காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவர் ஆர். சுப்பிரமணியன் மற்றும் கேரள அரசின் நீர்வளத் துறைச் செயலர் அசோக் குமார் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் காணொலி மூலம் கலந்து கொண்டனர்.

காவிரிப் படுகை தொடர்பாக தமிழகத்தில் விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, கடந்த 28-ஆவது கூட்டத்தில் கர்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையும், வெண்னார் திட்ட அறிக்கையும் முறையே மத்திய நீர் ஆணையத்திற்கும் (சி.டபிள்யு.சி) ஜல் சக்தித் துறை அமைச்சகத்திற்கும் திருப்பி அனுப்பப்பட்டன. பல்வேறு தொழில்நுட்ப, பொருளாதார அம்சங்களை ஆய்வு செய்வதற்காக சி.டபிள்யு.சி.க்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டதாக ஆணையக் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது.

இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இந்தப் பதிவுக்கு தமிழக அரசின் உறுப்பினர் சந்தீப் சக்úஸனா ஆணையத்திடம் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்திலும் விவசாயிகளின் போராட்டத்தை குறிப்பிட்டதோடு இந்தப் பதிவு நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மற்ற ஏழு கோரிக்கைகளை தமிழக அரசின் உறுப்பினர் சந்தீப் சக்úஸனா எடுத்து வைத்தார்.

அவை வருமாறு: காவிரி நதிப் படுகையில் கொண்டுவரப்படும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களை ஆணையம் கண்காணிக்க வேண்டும் என காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் (2018) குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில், கேரள அரசு அமராவதி (பாம்பார்) படுகையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. அது குறித்த விவரங்கள் கீழ் நதிக்கரையோர மாநிலமான தமிழகத்துக்கு தெரிவிக்கப்படாதது விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆணையம் இதுகுறித்து விவரங்களைச் சேகரித்து கேரள அரசிடம் விளக்கம் கோர வேண்டும்.

அடுத்து கேரள நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து கபினி அணைக்கு வரும் 21 டிஎம்சி தண்ணீரில் 17 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்குத் தர உச்சநீதிமன்ற இறுதி உத்தரவில் (16.02.2018) கூறப்பட்டுள்ளது. இதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

காவிரிப் படுகையில் நுகரப்படாத தண்ணீர் காவிரி நதியில் திருப்பிவிடப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற இறுதி உத்தரவில் தெரிவிக்கப்பட்டும் பெண்ணையாறு மற்றும் பாலாறு படுகையில் உள்ள சிறு பாசனங்கள், ஜில்லா பரிஷத் தொட்டிகளில் கர்நாடகம்,நிரப்புகிறது. இதை ஆணையம் கண்காணிக்க வேண்டும்.

மழைப் பற்றாக்குறை அளவீடுகள்: நிகழ் நீர் ஆண்டில் 2023 ஜூன் 1 முதல் 2024 மே 10 வரை காவிரி நீர்ப்பிடிப்பு (பிலுகுண்டுலு) பகுதியில் ஒட்டுமொத்த மழைப் பற்றாக்குறை 24 சதவீதம்தான். ஆனால், கர்நாடகம் நான்கு நீர்த்தேக்கங்களின் நீர்வரத்து அடிப்படையில் 52 சதவீதம் என பேரிடாக மதிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையில் மழைப் பற்றாக்குறை விகிதத்தின்படி தமிழகத்துக்கு தண்ணீர் அளிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆணையத்தோடு தொடர்புடைய இந்திய வானிலை ஆய்வுத் துறை குழு அளித்த பற்றாக்குறை சதவீதம் ஒப்புக் கொள்ளப்படவில்லை. ஆணையம் அமைக்கப்பட்ட 6 ஆண்டுகள் கழித்தும் விஞ்ஞானபூர்வமான மழைப் பற்றாக்குறை அளவீடுகள் உருவாக்கப்படாததால் தமிழகத்துக்கு இழப்பு. எனவே, ஆணையம் உரிய அளவீடுகளை உடனடியாக உருவாக்க வேண்டும்.

நிலுவை நீரை வழங்க வேண்டும்: 2023 ஜூன் முதல் 2024 மே 15-ஆம் தேதி வரை சுமார் 54.84 சதவீத பற்றாக்குறையுடன் 79 டிஎம்சி தண்ணீர் பிலுகுண்டுலுவில் வழங்கப்பட்டுள்ளது. மழைப் பற்றாக்குறை ஆண்டாக எடுத்துக் கொண்டு ஆணையம் பிப்ரவரி முதல் மாதந்தோறும் 2.5 டிஎம்சி தண்ணீர் பிலுகுண்டுலுவில் வழங்க உத்தரவிட்டது. இதன்படி மே 15-ஆம் தேதி வரை 8.7 டிஎம்சி தண்ணீர் தருவதற்குப் பதிலாக 2.7 டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுலுவில் கர்நாடகம் வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 6.005 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை. ஆனால், கர்நாடகம் குடிநீருக்கு தேவை எனக் கூறி நான்கு அணைகளிலும் மே 17- ஆம் தேதி வரை 19 டிஎம்சி தண்ணீரை வைத்துள்ளது.

கர்நாடகமே தன்னுடைய அறிக்கையில் 1.5 டிஎம்சி தண்ணீர்தான் பெங்களூருக்கு தேவை எனக் கூறியுள்ள நிலையில், ஜூன் வரை 4 டிஎம்சி நீர் போதுமானது. இதனால், தமிழகத்துக்கு மே 15-ஆம் தேதி வரை நிலுவை வைத்துள்ள 6.005 டிஎம்சி தண்ணீரையும், ஜுன் மாதம் வரை கணக்கிடப்படும் 9.19 டிஎம்சி தண்ணீரையும் உடனடியாக வழங்க ஆணையம் உத்தரவிடவேண்டும் என தமிழகம் சார்பில் வழியுறுத்தப்பட்டது.

இதையே கடந்த மே 16-ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆர்.சி.) கூட்டத்திலும் உத்தரவிடப்பட்டது. இதை ஆணையமும் ஏற்றுக்கொண்டு தண்ணீரை வழங்குமாறு கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக மாநில உறுப்பினரும் அந்த மாநில நீர்வளத் துறைச் செயலருமான ராகேஷ் சிங் கிடம் ஆணையத் தலைவர் ஹல்தார் கேட்டுக் கொண்டார். ஆனால், கர்நாடகம் மறுத்துவிட்டது.

இதற்கிடையே, நிகழ் மாதத்தில் தரப்படவேண்டிய 2.5 டிஎம்சியில் ஒரு டிஎம்சி வரை மே மாதம் கிடைத்துள்ளதாகவும், மீதமுள்ள தண்ணீரை வழங்க வேண்டும் எனவும் தமிழகம் கோரியது. ஆனால், பருவமழையை எதிர்பார்த்திருப்பதாக கர்நாடகம் குறிப்பிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com