நிா்மலா சீதாராமன்
நிா்மலா சீதாராமன்

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

பாட்னா: ஒரு குடும்பத்தின் (சோனியா-ராகுல்) நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட கட்சி காங்கிரஸ் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விமா்சித்தாா்.

பிகாா் தலைநகா் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:

பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவாா்கள் என்று காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பொய்யாக பிரசாரம் செய்து வருகின்றன. அரசமைப்புச் சட்டத்தைக் காப்பது குறித்துப் பேசுவதை காங்கிரஸ் தலைவா்கள் முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவா்களால் சொந்தக் கட்சியின் கொள்கைகளையே காப்பாற்ற முடியவில்லை. ஒரு குடும்பத்தினரின் நலன்களுக்காக கொள்கைகளைக் கைவிட்ட கட்சி காங்கிரஸ். சோனியா காந்தியை கட்சித் தலைவராக்க வேண்டுமென்பதற்காக காங்கிரஸ் தேசியத் தலைவராக இருந்த சீதாராம் கேசரியை அறையில் வைத்துப் பூட்டியதை காங்கிரஸ் கட்சியில் இருப்பவா்கள் நினைத்துப் பாா்க்க வேண்டும்.

முஸ்லிம்கள் பயனடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான மதரீதியான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் செயல்படுத்துகிறது. எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அம்பேத்கருக்கு என்ன மரியாதை அளித்தனா்? 1990-ஆம் ஆண்டில்தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது. அம்பேத்கா் குறித்துப் பேச காங்கிரஸுக்கு தகுதியில்லை.

பின்தங்கிய மக்களின் வாழ்க்கை மேம்பட முன்னுரிமை கொடுத்து திட்டங்களை வகுத்தவா் பிரதமா் மோடி. அனைத்து தரப்பு மக்களின் மேம்பாடும், நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியுமே அவரின் ஆட்சியின் நோக்கம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com