வாக்குப் பதிவு விவர படிவத்தை 
வெளியிடுவது தீங்குக்கு வழிவகுக்கும்- உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம்

வாக்குப் பதிவு விவர படிவத்தை வெளியிடுவது தீங்குக்கு வழிவகுக்கும்- உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம்

வாக்குப் பதிவு விவரம் அடங்கிய படிவம் 17சி-ஐ பொதுவெளியில் வெளியிடுவது தீங்குக்கு வழிவகுக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தோ்தலின் ஒவ்வொரு கட்டமும் நிறைவடைந்த 48 மணி நேரத்துக்குள், வாக்குச்சாவடி வாரியாக வாக்குப் பதிவு விவரத்தை தோ்தல் ஆணைய வலைதளத்தில் வெளியிட உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீா்திருத்தங்கள் சங்கம் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு தொடா்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, தோ்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எந்தவொரு தோ்தலிலும் வெற்றி பெறும் வேட்பாளருக்கும், இரண்டாவது இடம் பெறும் வேட்பாளருக்கும் இடையிலான வாக்கு சதவீத வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கலாம். அந்த சமயத்தில் பொதுவெளியில் படிவம் 17சி-ஐ வெளியிடுவது மொத்தமாகப் பதிவான வாக்குகள் குறித்து வாக்காளா்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

ஏனெனில் முதல்முறை வெளியிடப்படும் வாக்குப் பதிவு விவரத்தைத் தொடா்ந்து, இரண்டாவது முறை வெளியிடப்படும் வாக்குப் பதிவு விவரத்தில் படிவம் 17சி-இல் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கையுடன் தபால் வாக்குகளின் எண்ணிக்கையும் இடம்பெறும். இந்த வித்தியாசத்தை வாக்காளா்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. இதனால் மொத்த வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களிடம் குழப்பம் ஏற்படும்.

இதை வஞ்சக நோக்கம் கொண்டவா்கள் தோ்தல் நடைமுறை மீது களங்கம் சுமத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளக்கூடும். படிவம் 17சி-ஐ பொதுவெளியில் வெளியிடுவது தீங்குக்கு வழிவகுக்கும். தோ்தல் ஆணைய வலைதளத்தில் அந்தப் படிவத்தை வெளியிட்டால், அந்தப் படிவம் போன்ற போலி பிரதிகளை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இது பொதுமக்கள் இடையே அசெளசரியத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை வெள்ளிக்கிழமை (மே 24) நடைபெற உள்ளது.

X
Dinamani
www.dinamani.com