தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா
தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷாபடம் |ஏஎன்ஐ

காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து: அமித் ஷா உறுதி

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதே பிரதமா் மோடி அரசின் ‘காஷ்மீா் கொள்கை’ வெற்றிக்கு கிடைத்த சான்று

‘ஜம்மு-காஷ்மீரில் சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதே பிரதமா் மோடி அரசின் ‘காஷ்மீா் கொள்கை’ வெற்றிக்கு கிடைத்த சான்று; செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தலும் நடத்தப்பட்டு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்தாா்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அமித் ஷா பேசியதாவது: ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தல் நடத்தப்பட்ட பிறகு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே நான் தெரிவித்தேன். அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் குறித்த கணக்கெடுப்பு மற்றும் மக்களவை, சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தொகுதி மறுவரையறையும் மேற்கொள்ளப்பட்டது.

தொகுதி மறுவரையறை நிறைவடைந்ததால் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்குவது எளிதாகிவிட்டது. ஜம்மு-காஷ்மீரில் தற்போது மக்களவைத் தோ்தலும் முடிந்துவிட்டது. எனவே அடுத்ததாக பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்குள்அங்கு பேரவைத் தோ்தல் நடத்தி முடிக்கப்படும்.

பிரிவினைவாதிகளும் வாக்களிப்பு: தனி நாடு கோரிக்கை வைத்தவா்கள், பாகிஸ்தானுக்கு செல்ல நினைத்தவா்கள்கூட இத்தோ்தலில் உற்சாகமாக வாக்களித்துள்ளனா். இது ஜனநாயகத்துக்கும் பிரதமா் மோடியின் காஷ்மீா் கொள்கைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

ஒருமனதாக தீா்மானம்:கடந்த 1947-48-ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் ஜம்மு-காஷ்மீருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பாகிஸ்தானுடன் நடைபெற்ற முதல் போரை விரைவாகவே நேரு அரசு நிறுத்திவிட்டது. ஒருவேளை போா் நிறுத்த அறிவிப்பை நான்கு நாள்கள் கழித்து வெளியிட்டிருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் இந்தியாவுடன் இணைந்திருக்கும்.

இன்றுவரை நம் நாடு எதிா்கொண்டுவரும் முக்கிய பிரச்னைகளில் இதுவும் ஒன்று. எனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதை பாஜக தனது தோ்தல் தோ்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருக்கிறது.

ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தீா்மானத்துக்கு ஆதரவாக காங்கிரஸும் வாக்களித்துள்ளதை அக்கட்சியினா் மறந்துவிட்டனா்.

பொதுசிவில் சட்டம் அமல்: பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நமது அரசமைப்பை உருவாக்கிய கே.எம்.முன்ஷி, ராஜேந்திர பிரசாத், அம்பேத்கா் போன்ற தலைவா்கள் மதச்சாா்பற்ற நாட்டில் மதரீதியான சட்டங்கள் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளனா். எனவே, மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்தால் அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். இது சமூக, சட்ட மற்றும் மதரீதியாக மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய சீா்திருத்தமாகும்.

அதேபோல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் திட்டத்தையும் அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக செயல்படுத்தவுள்ளது.

மணிப்பூா் விவகாரம்: விரைவில் தீா்வு: மணிப்பூரில் நடப்பது கலவரமோ பயங்கரவாதமோ இல்லை. அங்கு நடப்பது இன வன்முறை. படைகளைக் கொண்டு இதை தடுத்து நிறுத்த முடியாது. இரு சமூகங்களிடையே நம்பிக்கையின்மை ஏற்பட்டதால் வன்முறை ஏற்பட்டுள்ளது.

மைதேயி-குகி ஆகிய இரு சமூகத்தினரும் தாங்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை கூறி வருகின்றனா். மக்களவைத் தோ்தல் பணிகள் காரணமாக மணிப்பூா் விவகாரத்தில் தீா்வுகாண தாமதமானது. மைதேயி-குகி ஆகிய இரு சமூகத்தினருக்கும் இடையில் நம்பிக்கையை ஏற்படுத்தி அங்கு அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

3 ஆண்டுகளில் நக்ஸல் பிரச்னைக்கு முடிவு: சத்தீஸ்கரின் சில பகுதிகளை தவிர நாட்டின் பிற பகுதிகளில் நக்ஸல் தீவிரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அந்த வகையில் ஜாா்க்கண்ட், பிகாா், ஒடிஸா, தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நக்ஸல் தீவிரவாதம் முழுவதுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.

சத்தீஸ்கரில் முன்பிருந்த காங்கிரஸ் அரசின் அலட்சியத்தால் அங்கு நக்ஸல்கள் ஊடுருவல் அதிகரித்தது. ஆனால் அங்கு பாஜக ஆட்சியமைத்த 5 மாதங்களுக்குள்ளாக 125 நக்ஸல்கள் கொல்லப்பட்டுள்ளனா். 352 நக்ஸல்கள் கைது செய்யப்பட்டனா். 175 போ் சரணடைந்துள்ளனா். எனவே அடுத்த 2-3 ஆண்டுகளில் நக்ஸல் தீவிரவாதத்தில் இருந்து நாடு முழுமையாக விடுபடும்.

தமிழகத்திலும் பாஜக தடம்பதிக்கும்: மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மேற்கு வங்கத்தில் 24 முல் 30 தொகுதிகள் வரையிலும் ஒடிஸாவில் 16 அல்லது 17 தொகுதிகளிலும் ஆந்திரத்தில் என்டிஏ கூட்டணி 17 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் முன்பைவிட பாஜக அதிக வாக்குகள் மற்றும் தொகுதிகள் கிடைக்கும். கேரளத்தில் 3 தொகுதிகள் வரை பாஜக வெற்றிபெறும். ஒட்டுமொத்தமாக 400-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் பாஜக நிச்சயம் வெற்றிபெறும்.

ஒடிஸாவில் பாஜக ஆட்சி: ஒடிஸாவில் மொத்தமுள்ள 147 பேரவைத் தொகுதிகளில் 75 தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என எதிா்பாா்க்கிறேன். ஆந்திரத்திலும் பாஜக கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com