ஓபிசியினர் உரிமைகளைப் பறித்தது திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மேற்கு வங்கம் பாராசத்தில் செவ்வாய்க்கிழமை சாலைப்  பேரணி மேற்கொண்ட பிரதமர் மோடி.
மேற்கு வங்கம் பாராசத்தில் செவ்வாய்க்கிழமை சாலைப் பேரணி மேற்கொண்ட பிரதமர் மோடி.

பாராசத்: மேற்கு வங்கத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவு இளைஞர்களின் உரிமைகளை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பறித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 2010-க்குப் பிறகு பல்வேறு சமூகத்தினருக்கு ஓபிசி அந்தஸ்து அளிக்கப்பட்டதை கொல்கத்தா உயர்நீதிமன்ற அண்மையில் ரத்து செய்து தீர்ப்பளித்ததை முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்து வருகிறார். இந்நிலையில், மேற்கு வங்கம் பாராசத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, முதல்வர் மம்தாவின் பெயரையோ கட்சியையோ குறிப்பிடாமல், "நீதிபதிகள் மீது கட்சி குண்டர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஏவிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை' என்று விமர்சித்தார். அவர் மேலும் பேசியதாவது:

மாநிலத்தில் ஓபிசி பிரிவினருக்கு திரிணமூல் காங்கிரஸ் செய்துள்ள துரோகத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. ஓரு சாராரை திருப்திப்படுத்தவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் ஓபிசி இளைஞர்களின் உரிமைகளை அக்கட்சி பறித்துள்ளது.

இந்த துரோகத்தை உயர்நீதிமன்றம் வெளிப்படுத்திய நிலையில், நீதித்துறை செயல்பாடுகள் குறித்து திரிணமூல் காங்கிரஸ் கேள்வி எழுப்புவது வியப்பை அளிக்கிறது. நீதித்துறை மீதும் அரசமைப்பு சட்டத்தின் மீதும் அக்கட்சிக்கு நம்பிக்கை இல்லையா?

இதுவரை இல்லாத வகையில், நீதிபதிகள் மீது அவர்கள் வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். நீதிபதிகள் மீது கட்சியின் குண்டர்களை ஏவிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல நிர்வாகத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே செயல்பட்டு வரும் அக் கட்சி, ஒருபோதும் மாநில இளைஞர்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் (சிஏஏ) திரிணமூல் காங்கிரஸ் கட்சி எதிர்த்து வருகிறது. ஆனால், இந்த சட்டத்தின் மூலம் இன்றைக்கு நூற்றுக்கணக்கான அகதிகள் இந்திய குடியுரிமையைப் பெற்று வருவதற்கு ஒட்டுமொத்த நாடும் சாட்சியாக உள்ளது.

மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி கட்சியும் ஜனநாயகமற்ற வழிமுறைகளைப் பின்பற்றுவதிலும் ஜனநாயக நடைமுறைகளை அலட்சியப்படுத்துவதிலும் பெயர்பெற்றவர்கள் என்றார்.

மாநிலத்தில் பல்வேறு சமூகத்தினருக்கான ஓபிசி அந்தஸ்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்த தீர்ப்பு குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி, "உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது. பாஜகவின் அறிவுறுத்தலின்படியே இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜார்க்கண்டில் மிகப் பெரிய பிரச்னை ஊடுருவல்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் பகுதிகளில் ஊடுருவல்கள் அதிகரிப்பது மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஜார்க்கண்ட், தும்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் பேசிய அவர், "ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊடுருவல்கள் மிகப் பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது.

ஊடுருவல்கள் அதிகரித்து வருவதால் பல பகுதிகளில் பழங்குடியினரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. ஊடுருவல்காரர்கள் பழங்குடியினரின் நிலங்களைப் பறித்து வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது.

அண்மையில் நடைபெற்ற இரண்டு சம்பவங்களில் பழங்குடியின இளம் பெண்கள் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகினர். இளம் பெண்ணின் உடல் 50 துண்டுகளாக வெட்டப்பட்டது.

மற்றொருவர் உயிரோடு எரிக்கப்பட்டார். இவ்வாறு பழங்குடியினரைக் குறிவைக்கும் இவர்கள் யார்? இந்த ஊடுருவல்காரர்களை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு ஏன் ஆதரிக்கிறது?

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும் காங்கிரஸýம் மதுபான ஊழல், ஒப்பந்த ஊழல், சுரங்கம் மற்றும் கனிம ஊழல் என ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழலில் ஈடுபட்டுள்ளன.

பாஜக தலைமையிலான கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதல் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com