

திரிணமூல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, ஆட்சிக்கு பாஜக வந்தால்தான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாட்டின் முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் மோடி இன்று (ஜன. 17) தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நாட்டின் முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் 4 புதிய அமிர்த பாரத் ரயில்களைப் பெற்றதற்காக மேற்கு வங்க மக்களுக்கு வாழ்த்துகள். மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு மால்டா மாவட்டத்தின் பங்களிப்பு முக்கியமானது.
மேற்கு வங்கம், நன்மதிப்புடன் பாஜக ஆளும் மாநிலங்களால் சூழப்பட்டுள்ளது. கிழக்கிந்திய மாநிலங்களை வெறுப்பு அரசியலில் இருந்து பாஜக விடுவித்துள்ளது.
பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்குப் பிறகு, தற்போது மேற்கு வங்கத்திலும் அதற்கான நேரம் வந்து விட்டது. மேற்கு வங்க மக்களுக்கான உண்மையான மாற்றத்தினை என்னால் உணர முடிகிறது. மாற்றம் வேண்டுமென்றால், பாஜக அரசு வரவேண்டும். இந்திய மக்கள், குறிப்பாக ஜென் ஸீ தலைமுறையினர், பாஜகவின் தலைமை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் வீடற்ற மக்களுக்கு வீடுகளையும், சுத்தமான குடிநீரையும் உறுதிசெய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன்.
ஒவ்வொரு குடிமகனும் மத்திய அரசின் திட்டங்களின் பலன்களை தடையின்றி பெற வேண்டும் என்று பாஜக அரசு விரும்புகிறது. ஆனால், மேற்கு வங்க அரசு அதனை மறுக்கிறது. திரிணமூல் காங்கிரஸ், ஊழல் மற்றும் வன்முறையில் வேரூன்றிய கட்சி.
மனசாட்சியற்ற, கொடூரமான திரிணமூல் காங்கிரஸ், நிதியைக் கொள்ளையடித்து, மக்களுக்குச் செல்லும் மத்திய அரசின் உதவியைத் தடுக்கிறது. மத்திய அரசு 40 முறை வெள்ள நிவாரண நிதியை அனுப்பியது. ஆனால், அது பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லை.
மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய சவாலான ஊடுருவலைத் தடுக்க, திரிணமூல் காங்கிரஸ் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது.
திரிணமூல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, பாஜக ஆட்சி வரும்போதுதான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி சாத்தியமாகும்.
வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை வழங்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன். கேரளத்தின் திருவனந்தபுரத்தில் பாஜக மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு காலத்தில் வெற்றிபெற முடியாத பகுதிகளிலும்கூட பாஜக மீதான ஆதரவு அதிகரித்து வருகிறது" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.