

மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்த வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு தவிர்க்கப்பட்டதற்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவின் ஹௌரா ரயில் நிலையத்தில் இருந்து குவாஹாட்டிக்கு இயக்கப்படும் புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி, ஜன. 17 ஆம் தேதியில் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இந்த நிலையில், இந்த வந்தே பாரத் ரயிலின் உணவுப் பட்டியலில் அசைவ உணவு இடம்பெறவில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து, திரிணமூல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "முதலில் அவர்கள் எங்கள் வாக்குகளைக் கண்காணித்தனர். தற்போது, எங்கள் தட்டுகளையும் (உணவு) அவர்கள் கண்காணிக்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி பெருமையாகப் பேசினார். ஆனால், இந்த ரயிலின் உணவுப் பட்டியலில் மீன் மற்றும் இறைச்சி நீக்கப்பட்டிருப்பது குறித்து அவர் விவரிக்கவேயில்லை.
அசைவ உணவை விரும்பும் மக்கள் வசிக்கும் இரு பகுதிகளை இணைக்கும் ஒரு ரயில், இப்போது சைவ உணவுகளை மட்டுமே வழங்குகிறது.
மீன் உண்ணும் மேற்கு வங்கத்தினரை முகலாயர்கள் என்று பிரதமர் மோடி கேலி செய்கிறார்.
தில்லியில் மீன்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிக்கன் உணவுகளை விற்றதற்காக ஓர் ஏழை வியாபாரி கொடூரமாகத் தாக்கப்படுகிறார்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நாம் என்ன உண்ண வேண்டும் என்பதை பாஜக தீர்மானிப்பதாகக் குற்றம் சாட்டிய திரிணமூல் காங்கிரஸ், நாளை நாம் எந்த உடை அணிய வேண்டும் யாரை நேசிக்க வேண்டும் என்பது முக்கியம் என்றும் கூறியுள்ளனர்.
வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு தவிர்ப்பு குறித்த திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ரயில்வே துறை, காமாக்யா தேவி கோயில் மற்றும் காளி தேவி கோயில் ஆகிய இரண்டு புனித இடங்களை இந்த வந்தே பாரத் ரயில் இணைப்பதால்தான், அசைவ உணவுகளைச் சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக விளக்கமளித்துள்ளனர்.
இருப்பினும், மேற்குறிப்பிட்ட இரு கோயில்களிலும் இன்றளவிலும் ஆடுகள் மற்றும் எருமைகள் பலியிடப்படும் வழிபாடு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.