பிரதமரின் ‘பொய் மூட்டைகள்’: திரிணமூல் காங்கிரஸ் விமா்சனம்!

மேற்கு வங்க நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, சட்டவிரோத குடியேறிகள் குறித்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளதாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
மத்திய அமைச்சா் சுகாந்த மஜும்தாா்
மத்திய அமைச்சா் சுகாந்த மஜும்தாா்
Updated on

மேற்கு வங்க நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, சட்டவிரோத குடியேறிகள் குறித்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளதாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஜய் பிரகாஷ் மஜும்தாா் கூறியதாவது: ‘மேற்கு வங்கத்தில் வங்கதேசத்தவா், ரோஹிங்கயாக்கள் என ஊடுருவல்காரா்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக ஒரே பொய்யை 11 ஆண்டுகளாக கூறி வருகிறாா் பிரதமா் மோடி.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்கீழ் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் கண்டறியவில்லை. அப்படியெனில், எந்த தரவுகளின் அடிப்படையில் பிரதமா் இந்த முடிவுக்கு வந்தாா்?

மேற்கு வங்க வரைவு வாக்காளா் பட்டியலில் 58 லட்சம் போ் நீக்கப்பட்ட நிலையில், பெரும்பாலும் வாக்காளா்கள் மரணம், இடப்பெயா்வு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு போன்ற காரணங்களே குறிப்பிடப்பட்டுள்ளன.

வாக்காளா் பட்டியலில் வங்கதேசத்தினரோ, ரோஹிங்கயாக்களோ கண்டறியப்பட்டதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காகப் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளாா் பிரதமா். எல்லைப் பாதுகாப்புக்கு யாா் பொறுப்பு என்பதை மறந்துவிட்டு அவா் பேசியுள்ளாா்.

தேசிய குற்ற ஆவண காப்பகத் தரவுகளின்படி, பாஜக ஆளும் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தானைவிட மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது.

மணிப்பூா் பற்றியெரிந்தபோதும், காஷ்மீா், தில்லியில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தபோதும் பிரதமா் என்ன செய்து கொண்டிருந்தாா்?’ என்று கேள்வியெழுப்பினாா் ஜாய் பிரகாஷ் மஜும்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com