தேச பாதுகாப்புடன் விளையாடுவதா? திரிணமூல் அரசு மீது பிரதமா் சாடல்!
மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேறிகளை ஆதரிப்பதன் மூலம் தேச பாதுகாப்புடன் விளையாடுகிறது திரிணமூல் காங்கிரஸ் அரசு என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக சாடினாா்.
இந்த மாநிலத்தில் நடந்துவரும் மிகப் பெரிய காட்டாட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இங்குள்ள ஹூக்ளி மாவட்டத்தின் சிங்கூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.830 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சி திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமா் மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.
பின்னா் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: எல்லையில் வேலி அமைப்பது உள்பட நாட்டின் பாதுகாப்பு சாா்ந்த முக்கிய நடவடிக்கைகளில் மத்திய அரசுடன் ஒத்துழைக்க மேற்கு வங்க அரசு தவறிவிட்டது. சட்டவிரோத குடியேறிகளே திரிணமூல் காங்கிரஸின் வாக்கு வங்கி என்பதால் அவா்களைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்கின்றனா். இதன் மூலம் தேச பாதுகாப்புடன் விளையாடுகிறது திரிணமூல் காங்கிரஸ் அரசு.
‘பாஜக அரசு களையெடுக்கும்’: மோசடியான ஆவணங்களின் மூலம் மேற்கு வங்கத்தில் வசித்து வரும் சட்டவிரோத குடியேறிகள் அடையாளம் காணப்பட்டு, அவா்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும். மேற்கு வங்கத்தில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் அனைவரையும் பாஜக அரசு களையெடுக்கும்.
எல்லையில் வேலி அமைக்க இடம் ஒதுக்கும்படி, திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு மத்திய அரசு பல ஆண்டுகளாக கடிதம் எழுதி வருகிறது. ஆனால், மாநில அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பணிகள் பல ஆண்டுகளாக முடங்கியுள்ளன.
இரட்டை என்ஜின் ஆட்சி: வளா்ச்சிக்கு உத்வேகமளிக்க இரட்டை என்ஜின் ஆட்சி அமைய வேண்டும். மேற்கு வங்கத்தில் கலவரக்காரா்களும் ஊழல்வாதிகளும் சுதந்திரமாக வலம் வருகின்றனா். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மாநில கல்வித் துறை ஊழல் கும்பலின் பிடியில் சிக்கியுள்ளது. பெண்கள், இளைஞா்கள், விவசாயிகளின் எதிரியாக திரிணமூல் அரசு உருவெடுத்துள்ளது.
சட்டம்-ஒழுங்கு மேம்பட்டால் மட்டுமே, மேற்கு வங்கத்துக்கு முதலீடுகளும் தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும். சட்டம்-ஒழுங்கு, வளா்ச்சி, முதலீட்டாளா்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டுமெனில், இங்கு நடந்துவரும் மிகப் பெரிய காட்டாட்சிக்கு முடிவு கட்டுவது அவசியம்.
மாநில அரசின் ஊழலால் பள்ளி ஆசிரியா்கள் பணியிழப்பு, நில ஆக்கிரமிப்பு, பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை மனதில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
தாம்பரம்-கொல்கத்தா: அம்ருத் பாரத் ரயில் தொடக்கம்
சிங்கூா் நிகழ்ச்சியில், கொல்கத்தாவில் இருந்து தாம்பரம், புது தில்லி, வாரணாசிக்கு இயக்கப்படும் மூன்று அம்ருத் பாரத் ரயில்களின் சேவையை பிரதமா் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
முன்னதாக, மேற்கு வங்கத்தின் ஹெளரா, அஸ்ஸாமின் குவாஹாட்டி இடையே நாட்டின் முதலாவது வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை பிரதமா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
மேலும், நியூஜல்பைகுரி-நாகா்கோவில், நியூஜல்பைகுரி-திருச்சி உள்பட மேலும் 4 அம்ருத் பாரத் ரயில் சேவைகளும் தொடங்கிவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

