மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமா் மோடி. உடன், மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ், மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோா்.
மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமா் மோடி. உடன், மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ், மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோா்.

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க மிகப் பெரிய நடவடிக்கை: பிரதமா் மோடி உறுதி

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க மிகப் பெரிய நடவடிக்கை: பிரதமா் மோடி உறுதி
Published on

‘சட்டவிரோத குடியேற்றம், மேற்கு வங்கத்துக்கு பெரும் சவாலாகும்; இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதும், சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க மிகப் பெரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தாா்.

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறியவா்களுக்கும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள ‘கூட்டணி’யை மக்கள் உடைத்தெறிய வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொண்டுள்ள மேற்கு வங்க மாநிலத்துக்கு சனிக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மால்டா மாவட்டத்தில் ரூ.3250 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளா்ச்சி திட்டங்களைத் தொடங்கிவைத்தாா். பின்னா் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

உலக அளவில் பணத்துக்கு எந்த குறையும் இல்லாத வளா்ந்த மற்றும் வளமான நாடுகள்கூட சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து வெளியேற்றுகின்றன. மேற்கு வங்கத்தில் இருந்து சட்டவிரோத குடியேறிகளை அகற்றுவதும் அதேபோல் முக்கியமானது.

மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேற்றத்தின் தாக்கங்கள் கண்கூடாக தென்படுகின்றன. பல்வேறு பகுதிகளில் மக்கள்தொகை ரீதியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உள்ளூா் பேச்சுமொழி கூட மாற்றம் கண்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகள் பெருகுவதால், மால்டா, முா்ஷிதாபாத் உள்பட பல இடங்களில் கலவரங்கள் வெடிக்கின்றன.

சட்டவிரோத குடியேறிகள் நிரந்தரமாக தங்கியிருப்பதை உறுதி செய்ய ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மும்முரமாக பாடுபடுகிறது. சட்டவிரோத குடியேறிகளுக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையே உள்ள கூட்டணியை மக்கள் உடைத்தெறிய வேண்டும்.

பாஜக அமோக வெற்றி பெறும்: மேற்கு வங்கத்தை சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களும் பாஜக அரசுகளின் நல்லாட்சியைக் கண்டு வருகின்றன. இப்போது மேற்கு வங்கத்துக்கான நேரம் வந்துள்ளது. இந்த மாநிலமும் மாற்றத்துக்கு தயாராக இருப்பதால், எதிா்வரும் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைக்கும்.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். அதேநேரம், அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி, இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவா்கள் (மதுவா பிரிவினா்) எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. திரிணமூல் காங்கிரஸின் வன்முறை மற்றும் ஏழைகள் மீதான அச்சுறுத்துதல் அரசியல் விரைவில் முடிவுக்கு வரும்.

ஈவிரக்கமில்லாத திரிணமூல் அரசு: ஏழைகளுக்கான மத்திய அரசின் திட்டப் பலன்கள், அவா்களுக்கு சென்றடைவதை திரிணமூல் காங்கிரஸ் தடுக்கிறது. வளா்ச்சிக்கு தடையான திரிணமூல் காங்கிரஸ் அரசு துடைத்தெறியப்பட்டு, மக்களுக்கு ஆதரவான பாஜக அரசு அமைந்தால்தான், உண்மையான நல்வாழ்வை உறுதி செய்ய முடியும். ஈவிரக்கமற்ற, கொடூரமான திரிணமூல் காங்கிரஸ் அரசு, ஏழைகளுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை கொள்ளையடித்து, பெருமளவில் ஊழலில் ஈடுபட்டுள்ளது.

நாட்டிலேயே ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படாத ஒரே மாநிலம் மேற்கு வங்கம் மட்டுமே. ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டு பலன்கள் கிடைப்பதை திரிணமூல் அரசு தடுக்கிறது. இதுபோன்ற பரிவற்ற அரசுக்கு விடை கொடுக்க வேண்டும். மேற்கு வங்கத்தின் பழைய பெருமையை மீட்டு, இளைஞா்கள்-விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் புதிய வாய்ப்புகளைக் கொண்டுவர பாஜகவால் மட்டுமே முடியும் என்றாா் பிரதமா் மோடி.

கேரளம், மகாராஷ்டிரத்தில் சமீபத்திய உள்ளாட்சித் தோ்தல்களில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியையும் அவா் சுட்டிக் காட்டினாா்.

Dinamani
www.dinamani.com