வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: வாராணசியில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி

100% வாக்குப்பதிவை குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்பு ஆரத்தியுடன் வழிபாடு.
வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: வாராணசியில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி
படம் | ஏஎன்ஐ

மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இறுதியாக 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப், ஒடிஸா உள்பட 7 மாநிலங்கள் மற்றும் சண்டீகா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து மேற்கண்ட தொகுதிகளில் பிரசாரம் வியாழக்கிழமை (மே 30) மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

7-ஆம் கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவில் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் பிரதமர் போட்டியிடும் வாராணசி மக்களவை தொகுதி மீது விழுந்துள்ளது.

2014இல் வாராணசி தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்ட பிரதமர் மோடி, அங்கு பதிவான மொத்த வாக்குகளில் 56.37 சதவீதத்தைப் பெற்று, 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 6,74,664 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார். இது அங்கு பதிவான மொத்த வாக்குகளில் 63.3 சதவீதமாகும். இந்த நிலையில், வாராணசியில் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி.

இந்த நிலையில், 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, வியாழக்கிழமை (மே 30) இரவு, வாராணசியில் கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தசஸ்வமேத படித்துறையில் சிறப்பு வழிபாட்டுடன் கங்கா ஆரத்தி காட்டப்பட்டது.

இதற்காக, தசஸ்வமேத படித்துறையில் ஒரே நேரத்தில் பலர் திரண்டு தீப ஆரத்தி காண்பித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், 100 சதவீத வாக்குப்பதிவு என தீபங்களால் படித்துறையில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரமும் மக்களை கவர்ந்துள்ளது. இந்த விஷேச நிகழ்ச்சியை காண்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் படித்துறையில் திரண்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com