
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆளும் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நிதியுதவி கொண்டுசெல்ல காவல்துறை வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டினார்.
கோவிந்த்பாக்கில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியது,
இந்த விவகாரம் குறித்து பகிரங்கமாகப் பேச விரும்புவதாகவும், ஆனால் தனக்குத் தகவலைப் பகிர்ந்துகொண்ட அதிகாரிகளை இது காயப்படுத்தும் என்பதால் அவ்வாறு செய்வதைத் தவிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
ஆளும் கட்சி வேட்பாளர்கள் தேர்தலுக்கு நிதியுதவி பெறுவதும், போலீஸ் வாகனங்கள் பயன்படுத்தப்படுவதும் பல மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளிடம் இருந்து எங்களுக்குத் தெரிய வந்தது. காவல் துறை அதிகாரிகளும் இதைக் கூறியுள்ளனர் என்று அவர் கூறினார்.
பவாரின் பேரன்கள் மற்றும் அவரது கட்சியின் வேட்பாளர் யுகேந்திர பவார் (பாரமதி) மற்றும் ரோஹித் பவார் (கர்ஜத்-ஜம்கேட்) ஆகியோரும் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பவார் குடும்பம் ஒவ்வொரு ஆண்டும் கோவிந்த்பாக்கில் சந்திக்கிறது, ஆனால் இந்த ஆண்டு துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரத்தில் 288 இடங்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிடும் மஹாயுதி கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்று வருகின்றது.