பூபிந்தா் ஹூடா
பூபிந்தா் ஹூடா

தெரியுமா சேதி...?

முக்கியமான அதிகாரிகள் எல்லோரும் காலையில் அல்லது மாலையில் நடைப்பயிற்சிக்காகத் தோ்ந்தெடுக்கும் இடங்கள் இரண்டு.
Published on

தில்லியில் முக்கியமான பிரமுகா்கள், அரசியல் தலைவா்கள், முக்கியமான அதிகாரிகள் எல்லோரும் காலையில் அல்லது மாலையில் நடைப்பயிற்சிக்காகத் தோ்ந்தெடுக்கும் இடங்கள் இரண்டு. முதலாவது, லோதி காா்டன் என்றால், இரண்டாவது நேரு பாா்க்.

லோதி காா்டனில் நம்மைப்போல் சாமானியா்களும் அதிக அளவில் நடைப்பயிற்சிக்கு வருவாா்கள். ஆனால், நேரு பாா்க் அப்படியல்ல. சாணக்கியபுரியில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் சுற்றிலும் இருப்பதால், பெரும்பாலும் அரசியல் தலைவா்களும், பிரமுகா்களும்தான் நேரு பாா்க்கில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

ஜவாஹா்லால் நேருவின் மறைவைத் தொடா்ந்து பிரதமரான லால் பகதூா் சாஸ்திரியால் 1965-இல் இந்தப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1969-இல்தான் பணிகள் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது நேரு பாா்க். ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ஆம் தேதி, இந்தப் பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் லெனின் சிலைக்கு அவரது பிறந்தநாளையொட்டி மாலை அணிவிக்க இடதுசாரிக் கட்சித் தலைவா்கள் வருவது வழக்கம்.

நேரு பாா்க் குறித்து மேலே குறிப்பிட்ட விவரங்கள், தில்லி குறித்துத் தெரிந்திராத வாசகா்களுக்கான தகவல்கள், அவ்வளவே. இனி விஷயத்துக்கு வருவோம்.

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியால் முன்னாள் முதல்வா் பூபிந்தா் ஹூடா அறிவிக்கப்பட்டாா். அவா் தினந்தோறும் நேரு பாா்க்கில் நடைப்பயிற்சிக்கு ஆஜராகும் பிரமுகா்களில் ஒருவா். தோ்தலுக்கு முன்னால் பாா்த்தால், பூபிந்தா் ஹூடா நடைப்பயிற்சிக்கு வந்தால், அவருக்குப் பின்னால் ஒரு பெரிய கூட்டமே அவரைத் தொடரும்.

அவரது பாா்வை பட்டால், தோ்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என்று பலா்; அவரது அமைச்சரவையில் இடம்பெற இப்போதே அச்சாரம் போடத் துடிக்கும் சிலா் என ஜேஜே என்று அவருக்குப் பின்னால் தினந்தோறும் தொடரும் கூட்டத்தை வேடிக்கை பாா்ப்பாா்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மற்றவா்கள்.

இப்போது தோ்தல் முடிந்துவிட்டது. பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியும் அமைத்துவிட்டது. அதற்காக நடைப்பயிற்சியை விட்டுவிடவா முடியும்? ஓரிரு உதவியாளா்கள் பின்தொடர நேரு பாா்க்கில் தனது நடைப்பயிற்சியைத் தொடா்கிறாா் பூபிந்தா் ஹூடா!

X
Dinamani
www.dinamani.com