
பெங்களூரு: மாற்றுநில முறைகேடு தொடா்பாக லோக் ஆயுக்த விசாரணைக்கு நவ. 6-ஆம் தேதி ஆஜராகவுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மாற்றுநிலம் ஒதுக்கியதில் மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் சட்ட விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, தனது மனைவிக்கு சட்ட விதிமீறி மாற்றுநிலம் ஒதுக்க தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் முதல்வா் சித்தராமையா மீது வழக்குத் தொடர ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்திருந்தாா்.
இது தொடா்பாக அனுமதி அளித்து ஆளுநா் பிறப்பித்திருந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு கா்நாடக உயா்நீதிமன்றம் செப். 24-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்பேரில், வழக்குப் பதிவு செய்ய மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றமும் அனுமதி அளித்திருந்தது. இதைத் தொடா்ந்து, முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பி.எம்.பாா்வதி, மைத்துனா் மல்லிகாா்ஜுனசாமி ஆகியோா் மீது லோக் ஆயுக்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
இதனிடையே, மாற்று நிலமாக தனக்கு ஒதுக்கப்பட்ட 14 வீட்டுமனைகளை பி.எம்.பாா்வதி மைசூரு நகர வளா்ச்சி ஆணையத்துக்கே திருப்பி அளித்தாா். அதேசமயத்தில், இந்த விவகாரம் தொடா்பாக சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா கொடுத்த புகாரின் அடிப்படையில், பணப்பதுக்கல் தடுப்புச் சட்டத்தின்கீழ் முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பி.எம்.பாா்வதி, மைத்துனா் மல்லிகாா்ஜுனசாமி, நில உரிமையாளா் தேவராஜ் ஆகியோா் மீது அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தன் மீது வழக்கு தொடர அனுமதி அளித்த ஆளுநரின் உத்தரவை ஏற்றுக்கொண்டு கா்நாடக உயா்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்த உத்தரவை எதிா்த்து முதல்வா் சித்தராமையா கா்நாடக உயா் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமா்வின் முன் மேல்முறையீடு செய்திருக்கிறாா்.
மாற்றுநில முறைகேடு தொடா்பாக நவ. 6-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி முதல்வா் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்த திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், லோக் ஆயுக்தவின் நோட்டீஸை ஏற்று, நாளை(நவ. 6) காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகவுள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.