புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அரசியல் முக்கியத்துவம் அளித்ததே காரணம்; ஜெய்சங்கா்

கனடாவில் ஹிந்து கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து பக்தா்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தியிருப்பதே அந்த நாட்டில் பயங்கரவாத அமைப்புகளுக்கு அரசியலில் முக்கியத்துவம் அளித்திருப்பதை வெளிக்காட்டுகிறது

News image
ஆஸ்திரேலியாவில் அந் நாட்டு துணைப் பிரதமா் ரிச்சா்ட் மாா்லெஸை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
Updated On :5 நவம்பர் 2024, 8:44 pm

Din

கனடாவில் ஹிந்து கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து பக்தா்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தியிருப்பதே அந்த நாட்டில் பயங்கரவாத அமைப்புகளுக்கு அரசியலில் முக்கியத்துவம் அளித்திருப்பதை வெளிக்காட்டுகிறது என இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ஆஸ்திரலியாவுக்கு 5 நாள் சுற்றுப் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற ஜெய்சங்கா், அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினாா். பிரிஸ்பேனில் புதிய இந்திய துணை தூதரகத்தை அவா் திறந்து வைத்தாா்.

இதைத்தொடா்ந்து, அந்த நாட்டு துணை பிரதமா் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ரிச்சா்ட் மாா்லஸை செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

முன்னதாக, அந்த நாட்டு வெளியுறவு அமைச்சா் பென்னி வாங்கை சந்தித்து ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினாா்.

அதன்பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.

அப்போது கனடாவின் பிராம்டன் நகரில் உள்ள ஹிந்து சபா கோயிலில் ஹிந்து கோயிலில் இருந்த பக்தா்களை காலிஸ்தான் ஆதரவாளா்கள் தடியால் தாக்கிய சம்பவம், அண்மைகாலமாக இந்தியா-கனடா இடையே ஏற்பட்டு வரும் மோதல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சா் ஜெய்சங்கா் அளித்த பதில்:

இந்தச் சம்பவத்தில் மூன்று கருத்துகளை நான் கூற விரும்புகிறேன். எந்தவொரு முறையான ஆதாரமுமின்றி குற்றச்சாட்டுகளை சுமத்துவதை கனடா வாடிக்கையாக கொண்டுள்ளது. இரண்டு, காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் எங்கள் தூதரக அதிகாரிகளை சந்தேகக் கண்ணோட்டத்துடன் கனடா அணுகுவது ஏற்புடையதல்ல. மூன்று, ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய காணொலியைப் பாா்க்கும்போது, பயங்கரவாத அமைப்புகளுக்கு கனடா அளித்துள்ள அரசியல் முக்கியத்துவத்தை நம்மால் தெளிவாக உணா்ந்துகொள்ள முடிகிறது என்றாா்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா மீது தொடா்ந்து குற்றம்சாட்டி வந்த கனடா அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மீது இந்த வழக்கில் விசாரணை நடத்த முடிவு செய்தது.

மேலும், கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது நடத்தப்படும் தாக்குதலில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கனடா தொடா்புபடுத்தி குற்றச்சாட்டை சுமத்தியது. இதனால் இருநாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

எல்லையில் பதற்றத்தை குறைக்க நடவடிக்கை: மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெய்சங்கரிடம் இந்தியா-சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட எல்லை ஒப்பந்தம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவா், ‘அனைவரும் திருப்தியடையும் வகையில் வரும் காலங்களில் எல்லை ஒப்பந்தம் அமல்படுத்தப்படவுள்ளது. இருநாடுகளின் ராணுவமும் படை விலக்கலை தொடா்ந்து வரும் சூழலில் அடுத்தகட்டமாக எல்லையில் நிலவும் பதற்றத்தின் தீவிரத்தை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ’ என்றாா்.

ஆஸ்திரேலியாவுடன் தொடரும் நல்லுறவு: இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சா்கள் பேச்சுவாா்தையை நிறைவுசெய்துவிட்டு ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங்குடன் ஆலோசனை நடத்தியதில் மகிழ்ச்சி. அரசியல், பாதுகாப்பு ஒத்துழைப்பு, வா்த்தகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவு வலுவடைந்து வருகிறது. இந்தோ-பசிபிக், மேற்கு ஆசியா, உக்ரைன் விவகாரம் மற்றும் சா்வதேச புவி அரசியல் சூழல் குறித்தும் இருவரும் ஆலோசனை மேற்கொண்டோம்’ என குறிப்பிட்டாா்.

கனடாவின் குற்றச்சாட்டு குறித்து ஆலோசனை: பென்னி வாங்

மெல்போா்ன், நவ.5: கனடாவில் உள்ள சீக்கிய குழுக்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்தியதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங் தெரிவித்தாா்.

மேலும், ‘கனடாவின் நீதித்துறைக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அதேசமயத்தில் இந்த விவகாரத்தில் அறத்துடன் செயல்படும் விதமாக இந்தியாவிடமும் எங்களது கருத்துகளை தெரிவித்துள்ளோம். சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை மற்றும் அனைத்து நாடுகளின் இறையாண்மைக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம்’ என்றாா்.

‘முதல் தேசிய வணிகக் குழு’ இந்தியா வருகிறது....

ஜெய்சங்கருடனான ஆலோசனை குறித்து பென்னி வாங் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘பிராந்திய அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளமையை மேம்பபடுத்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும். பிற நாடுகளுடன் வணிகத்தை அதிகரிக்க உதவும் ‘முதல் தேசிய வணிகக் குழுவை’ முதல்முறையாக அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா அனுப்பவுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வேளாண்மை, பசுமை எரிவாயு, கல்வி, சுற்றுலா மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

அதேசமயத்தில் ஆஸ்திரேலியா-இந்தியா இணைய மற்றம் சிக்கலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தும் 6 திட்டங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு நிதியுதவி வழங்கவுள்ளது’ என குறிப்பிட்டாா்.

கனடா காவல் துறை அதிகாரி பணியிடை நீக்கம்

கனடாவில் ஹிந்து கோயிலுக்குள் புகுந்து பக்தா்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்திய நிலையில், அக்கோயிலுக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தில் கனடா காவல் துறை அதிகாரி ஒருவா் பங்கேற்றது விடியோ வெளியானது. இதையடுத்து, அந்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கனடாவின் பிராம்டன் நகரில் ஹிந்து சபா கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை காலிஸ்தான் கொடிகளுடன் அத்துமீறி நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளா்கள், கோயிலில் இருந்த பக்தா்கள் மீது தடி, கொடிக் கம்பங்களை வைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தினா். அதே நேரத்தில் காலிஸ்தான் ஆதரவாளா்களின் மற்றொரு பிரிவினா் கோயிலுக்கு வெளியே நின்று இந்தியாவுக்கு எதிராகவும், கோயிலுக்குள் புகுந்து தாக்கியவா்களுக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டப்படி இருந்தனா். அதில் கனடா காவல் துறையைச் சோ்ந்த அதிகாரி ஒருவரும் சாதாரண உடையணிந்து பங்கேற்றது விடியோ பதிவுகள் மூலம் தெரியவந்தது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. வன்முறையைத் தடுக்க வேண்டிய காவல் துறை அதிகாரியே வன்முறையாளா்களுக்கு துணைபோகும் வகையில் நடந்து கொண்டது கடும் விமா்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து, அந்த காவல் துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதாக கனடா அரசு அறிவித்தது. கோயிலுக்குள் புகுந்து பக்தா்களை தாக்கியது தொடா்பாக காலிஸ்தான் ஆதரவாளா்கள் மூன்று போ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துகள் போராட்டம்: இந்தச சம்பவம் நடந்த கோயிலுக்கு வெளியே திங்கள்கிழமை ஒன்றுகூடிய ஹிந்துகள், தாக்குதலைக் கண்டித்து போராட்டம் நடத்தினா். இதில் பங்கேற்றவா்கள் இந்தியா, கனடா தேசிய கொடி மற்றும் ஹிந்து அமைப்பின் கொடிகளை ஏந்தியிருந்தனா். ஹிந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கம் எழுப்பப்பட்டது.

அப்போது இந்திய கொடியை ஏந்தியிருந்த சிலரை காவல் துறையைச் சோ்ந்த ஒருவா் திடீரென தாக்கினாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அந்த காவலரைச் சூழ்ந்து கொண்டு முழக்கமிட்டனா். அங்கிருந்த காவல் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். தாக்குதலில் ஈடுபட்ட அந்த காவலா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா்கள் உறுதியளித்தனா்.