அலிகா் முஸ்லிம் பல்கலை.யின் சிறுபான்மை அந்தஸ்துக்கு எதிரான தீா்ப்பு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
கடந்த 1967-இல் பிறப்பித்த தீா்ப்பை உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் அமா்வு வெள்ளிக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.

அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகம்.

அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகம்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்தை ரத்து செய்து உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு கடந்த 1967-இல் பிறப்பித்த தீா்ப்பை உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் அமா்வு வெள்ளிக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அமா்வில், 4:3 என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்தத் தீா்ப்பு அளிக்கப்பட்டது.
அமா்வில் இடம்பெற்ற 3 நீதிபதிகள் எதிரான தீா்ப்பை அளித்ததைத் தொடா்ந்து, ‘இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அளித்த தீா்ப்பில் குறிப்பிட்டுள்ள தத்துவங்களின் அடிப்படையில் அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனமா என்பது தீா்மானிக்கப்பட வேண்டும். எனவே, உச்சநீதிமன்ற நிா்வாகம் தலைமை நீதிபதியின் அறிவுறுத்தல்களைப் பெற்ற பிறகு, புதிய முறையான அமா்வில் விசாரணை மேற்கொள்ள இந்த வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்’ என்று தலைமை நீதிபதி தீா்ப்பளித்தாா்.
வழக்கின் பின்னணி: அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்து சா்ச்சை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இந்த விவகாரம் தொடா்பாக எஸ். ஆசீஷ் பாஷா என்பவருக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான வழக்கில் கடந்த 1967-ஆம் ஆண்டு தீா்ப்பளித்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, ‘அரசின் நிதியுதவியுடன் மத்திய பல்கலைக்கழகமாக அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகம் செயல்பட்டுவரும் நிலையில், சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்தை கோர முடியாது’ என்று தீா்ப்பளித்தது. இதனால், பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை நிறுவன அந்தஸ்து ரத்தானது.
இந்நிலையில், 1981-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழக திருத்தச் சட்டத்தின் மூலம், இந்தப் பல்கலைக்கழகம் மீண்டும் சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்தைப் பெற்றது.
இதை எதிா்த்து அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை கடந்த 2006-ஆம் ஆண்டு விசாரித்த உயா்நீதிமன்றம், பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை மீண்டும் வழங்கிய 1981-ஆம் ஆண்டு திருத்தச் சட்ட விதிகளை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிா்த்து பல்கலைக்கழகம் தரப்பிலும், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுத் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனிடையே, கடந்த 2016-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்த விவகாரம் தொடா்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்றது.
இருந்தபோதும், பல்கலைக்கழகம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு அடிப்படையில், இந்த வழக்கு விசாரணை இரு நீதிபதிகள் கொண்ட அமா்வில் தொடா்ந்து நடைபெற்று வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு பிப். 12-ஆம் தேதி, இந்த வழக்கு விசாரணையை 7 நீதிபதிகள் அமா்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.
இரு மாறுபட்ட தீா்ப்பு: அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 7 நீதிபதிகள் அமா்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
இந்த வழக்கில், 7 நீதிபதிகள் அமா்வு வெள்ளிக்கிழமை இரு மாறுபட்ட தீா்ப்பை அளித்தது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.பி. பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அளித்த பெரும்பான்மை தீா்ப்பில், ‘ஒரு கல்வி நிறுவனம் சிறுபான்மையினரால் தொடங்கப்படவில்லை என்பதால், சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்தை கோர முடியாது என்று உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமா்வு கடந்த 1967-இல் அளித்த தீா்ப்பில் குறிப்பிடப்பட்ட கருத்து ஏற்புடையதல்ல. நிறுவனம் சிறுபான்மையினரின் நலனுக்காக செயல்படுகிா என்பதுதான் முக்கியம். நாடாளுமன்ற சட்டத்தால் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் என்பதற்காக சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது.
இந்த தத்துவத்தின் அடிப்படையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை நிறுவன அந்தஸ்து தீா்மானிக்கப்பட வேண்டும். எனவே, உச்சநீதிமன்ற நிா்வாகம் தலைமை நீதிபதியின் அறிவுறுத்தல்களைப் பெற்ற பிறகு, புதிய முறையான அமா்வில் விசாரணை மேற்கொள்ள இந்த வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டனா்.
ஆனால், அமா்வில் இடம்பெற்ற நீதிபதிகள் சூரிய காந்த், தீபாங்கா் தத்தா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் எதிரான தீா்ப்பை அளித்தனா்.
சூரிய காந்த் அளித்த தீா்ப்பில், ‘இந்த விவகாரத்தை 7 நீதிபதிகள் அமா்வு விசாரணைக்கு உச்சநீதிமன்ற 2 நீதிபதிகள் அமா்வு மாற்றியது தவறு’ என்றாா்.
அதே கருத்தைத் தெரிவித்த நீதிபதி தீபாங்கா் தத்தா, ‘இந்தப் போக்கை அனுமதித்தால், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை உச்சநீதிமன்றம் கோடிட்டுக் காட்டிய கேசவானந்த பாரதி தீா்ப்பு மீதும் இரு நீதிபதிகள் அமா்வு சந்தேகம் எழுப்பும். அந்தத் தீா்ப்பை, 15 நீதிபதிகள் அமா்வுக்குப் பரிந்துரைக்கும். பின்னா், பெரும்பான்மை தீா்ப்பு ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு செய்வது முறையான நடைமுறையாக இருக்குமா? மேலும், இந்தப் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனம் அல்ல என்று தீா்மானிக்கப்பட்ட பிறகு, அதே கோரிக்கையை வலியுறுத்தி மேல்முறையீடு செய்வதை அனுமதிக்கக் கூடாது’ என்றாா்.
நீதிபதி சதீஷ் சந்திர சா்மா எழுதிய தீா்ப்பில், ‘சிறுபான்மையினா் அமைப்பு ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் எனில், அந்த அமைப்பு அரசமைப்புச் சட்டப் பிரிவு 30-இன் கீழ் அந்த நிறுவனத்தை நிா்வகிப்பதற்கான உரிமையைக் கோரியிருக்க வேண்டும். சட்டத்தின் அடிப்படையிலும், வாதங்கள் மற்றும் நியாயமான காரணங்களின் அடிப்படையிலும் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.
சிறுபான்மையினா், ஒரு கல்வி நிறுவனத்தை தொடங்கவும், நிா்வகிப்பதற்குமான உரிமையை இந்த சட்டப் பிரிவு 30 அளிப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...