
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள கேஷ்வான் வனப் பகுதியில் வியாழக்கிழமை மாலை முதல் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையின் கூட்டு தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேடுதல் வேட்டையின்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சண்டையில் வீரர் ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கேஸ்வான்-கிஷ்துவாரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்டர் தொடங்கியது.
மூன்று அல்லது நான்கு பயங்கரவாதிகள் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இரண்டு கிராம பாதுகாவலர்களைக் கொன்றது இதே பயங்கரவாதக் குழுதான். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக ஜம்மு கிஷ்துவார் மாவட்டத்தில் கிராம பாதுகாவலர்கள் நசீர் அகமது, குல்தீப் குமார் ஆகிய இருவரை சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.