மணிப்பூர் மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கடந்த சில நாள்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
என்ன நடந்தது?
ஜிா்பாம் நகருக்குத் தெற்கே 30 கி.மீ. தொலைவில் அடா்ந்த வனப்பகுதி மற்றும் மலைகளால் சூழப்பட்ட போரோபெக்ரா கிராமம் அமைந்துள்ளது. அங்குள்ள காவல் நிலையம் மற்றும் அதையொட்டி அமைந்த மத்திய ஆயுதக் காவல் படை (சிஆா்பிஎஃப்) முகாம் மீது அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினா். தொடா்ந்து அருகேயுள்ள சந்தைக்குள் நுழைந்த தீவிரவாதிகள், கடைகளுக்குத் தீ மூட்டியதுடன் பொதுமக்களின் வீடுகளையும் சூறையாடினா்.
இதையடுத்து, பதற்றமான சூழல் நிலவி வருவதைத் தொடர்ந்து கூடுதல் பாதுகாப்புப் படையினா் வரவழைக்கப்பட்டு, மாயமானவா்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜிரிபாம் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவில், ஜிரிபாம் மாவட்டத்தில் ஒரு சில சமூக விரோத சக்திகள் நடத்திவரும் சட்டவிரோத நடவடிக்கைகளால் அமைதியும் சட்டம் ஒழுங்கும் சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொது இடங்களில், 5 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் ஒருசேர கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதேபோல, மக்கள் கூர்மையான ஆயுதங்கள், கற்கள், குச்சிகள் போன்றவற்றை வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
மேலும், வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் திருமணம், இறுதிச்சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே நடத்தலாம். மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களிலும் ராணுவம், அஸ்ஸாம் ரைஃப்பிள்ஸ் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து கடந்த ஒரு வாரமாக மணிப்பூர் காவல்துறை மேற்கொண்ட தேடுதல் வேட்டையில், ஏராளமான ஆயுதங்கள், வெடி பொருட்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, மேற்கு இம்பால், சூரச்சந்த்பூர், கேங்க்போக்பி, பிஷ்னுபூர், டென்ங்நௌபால், காக்சிங் ஆகிய பகுதிகளில் இந்த பொருள்கள் அதிகளவில் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு ஆசிரியை எரித்துக் கொலை?
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளின் தாய் என்றும் பாராமல், 31 வயது நிரம்பிய ஆசிரியை ஒருவர் கடந்த வியாழக்கிழமை, பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதுடன் சித்ரவதை செய்து எரித்துக் கொல்லப்பட்டதாக உள்ளூர் பழங்குடியின அமைப்பான (ஐடிஎல்எஃப்) தெரிவித்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கடந்த சனிக்கிழமை, பிஷ்னுபூர் மாவட்டத்தில் வேளாண் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாய்டோன் கிராமத்தில் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை குறிவைத்து அருகாமையிலுள்ள மலைப்பகுதியிலிருந்து ஆயுதப்படையினர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். அதில், அங்கிருந்த சாப்பம் சோஃபியா என்ற 27 வயது இளம்பெண்ணின் உடலில் குண்டு துளைத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிக்க: மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு!
மணிப்பூர் கலவரத்தின் பின்னணி:
மணிப்பூரில் பெரும்பான்மையான மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு குகி, நாகா ஆகிய பிற பழங்குடி சமூகங்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, இரு சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் உண்டான மோதல் வன்முறையாக மாறியது.
மணிப்பூரில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் அரங்கேறி வரும் பல்வேறு வன்முறை சம்பவங்களில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 250-ஐ கடந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் சுமார் 60,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் பலர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அமைதியை நிலைநாட்ட பல்வேறு மத்திய பாதுகாப்புப் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: மணிப்பூரில் மேலும் 2 சடலங்கள் மீட்பு!