நாட்டின் தலைநகராக இனியும் தில்லி இருக்க வேண்டுமா? சசி தரூர் கேள்வி!

தில்லியில் காற்று மாசு விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அரசை விமர்சித்துள்ளார்.
Shashi Tharoor
சசி தரூர்DIN
Published on
Updated on
1 min read

தில்லியில் காற்றின் தரம் மிகவும் அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளதைத் தொடர்ந்து, "இனியும் நாட்டின் தலைநகராக தில்லி இருக்க வேண்டுமா?" என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தில்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருகின்றது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின் படி இன்று (நவ. 19) காலை நகரின் பல இடங்களில் காற்றின் தரக் குறியீடு 500 ஐ தாண்டியதாகக் கூறப்படுகிறது. ஒரு மணி நேரம் வெளியில் உள்ள காற்றை சுவாசித்தால் கூட நுரையீரலும் இதயமும் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சசி தரூர், ”அதிகாரப்பூர்வமாக உலகின் மிக மாசடைந்த நகரமாக தில்லி உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள வங்கதேச தலைநகரான தாக்காவை விட 4 மடங்கு அபாயகரமான நச்சுத்தன்மை வாய்ந்த நகராக தில்லி இருக்கின்றது.

இந்தக் கொடுமையை பல ஆண்டுகளாக நமது அரசு நிர்வாகம் பார்த்து வருகிறது. ஆனால், அதற்காக எந்த முயற்சியையும் எடுக்காமல் இருப்பது மனசாட்சிக்கு விரோதமானது.

நான் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் காற்றின் தரம் குறித்து விவாதிக்க எம்.பி.க்கள் உள்பட வல்லுநர்கள், பங்குதாரர்கள் ஆகியோருடன் வட்டமேசை மாநாடு நடத்தி வந்தேன். ஆனால், எதுவும் மாறாததாலும், இதுகுறித்து யாரும் கவலைப்படாததாலும் கடந்தாண்டு முதல் இதனை கைவிட்டுவிட்டேன்.

இந்த நகரம் நவம்பர் முதல் ஜனவரி வரை வாழத்தகுதியற்ற நிலையிலும், மற்ற மாதங்களில் சிரமப்பட்டு வாழும் நிலையிலும் இருக்கிறது. இது இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தில்லியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தில்லி அரசு ’மருத்துவ அவசரநிலை’ அறிவிப்பை வெளியிட்டு பொது சுகாதார நலனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com