
ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், அடுத்தாண்டு நடைபெறும் தில்லி பேரவைத் தேர்தலுக்கான முக்கிய வாக்குறுதிகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
தில்லியில் நடைபெறும் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, தனது கட்சியை வலுப்படுத்த அரவிந்த் கேஜரிவால், தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ‘ரேவ்தி பே சார்ச்சா’ (இலவசங்களுக்கான விவாதங்கள்) என்ற பெயரில் நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறும் முதல்கட்ட பிரசாரத்தை நடத்தவுள்ளார்.
15 நாள்கள் நடைபெறும் இந்தப் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மொத்தமாக 65 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. மேலும் இந்தக் கூட்டத்தில் 6 முக்கிய நலத்திட்டங்களை ஊக்குவிப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இலவச மின்சாரம், குடிநீர், கல்வி, மருத்துவம், மொஹாலா கிளீனிக், இலவசப் பேருந்து, யாத்திரை செல்லும் பக்தர்களுக்கான திட்டம், பெண்களுக்கான மாதம் ரூ.1000 ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், “ தலைநகரான தில்லியில் மத்திய அரசான பாஜக அரசு பாதி அதிகாரத்தைக் கொண்டுள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு தில்லிக்கு எதுவுமே செய்யவில்லை.
நாடு முழுவதும் 20 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. ஆனால், அவர்கள் மக்களுக்கு உதவும் வகையில் இலவசத் திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. தில்லிக்கு ஆம் ஆத்மி செய்யும் திட்டங்களையும் அவர்கள் செய்யவிடாமல் தடுத்துவருகின்றனர்.
கடந்த தேர்தலின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் ஹர்தீப் பூரி ஆகியோர் பூர்வாஞ்சலின் சமூக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் அளித்தனர். பூர்வாஞ்சல் மக்களுக்கு அதிகாரபூர்வ காலனி அமைத்து தருவதாக 5 ஆண்டுகளாகக் கூறிவந்தாலும் இதுவரையும் எதுவும் செய்யவில்லை. அவர்களுக்கு மாறாக நாங்கள் பூர்வாஞ்சல் மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்துள்ளோம்” என்றார்.
தில்லி பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5-6 மாதங்கள் இருக்கும் வேளையில் ஆம் ஆத்மி கட்சி முதற்கட்டமாக 11 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவர்களில் 6 பேர் மாற்றுக்கட்சியில் இருந்து ஆம் ஆத்மியில் இணைந்தவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.