முதல்வர் பினராயி விஜயன்
முதல்வர் பினராயி விஜயன்கோப்புப் படம்

வயநாடு மக்களின் மறுவாழ்வு: மத்திய அரசு பாராமுகம்- முதல்வா் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

கேரளத்தின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான மாநில அரசின் நிதி தேவைகள் மீது மத்திய அரசு தொடா்ந்து பாராமுகமாக உள்ளது என்று முதல்வா் பினராயி விஜயன் குற்றம்சாட்டினாா்.
Published on

கேரளத்தின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான மாநில அரசின் நிதி தேவைகள் மீது மத்திய அரசு தொடா்ந்து பாராமுகமாக உள்ளது என்று முதல்வா் பினராயி விஜயன் குற்றம்சாட்டினாா்.

வயநாட்டில் கடந்த ஜூலையில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் புதைந்தன. 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்த நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவித்து, சிறப்பு நிதித் தொகுப்பை வழங்க வேண்டுமென கேரள அரசு கோரியது. ஆனால், ‘வயநாடு நிலச்சரிவு உள்பட எந்த பேரிடரையும் தேசியப் பேரிடராக அறிவிக்க தற்போதைய விதிமுறைகளில் இடமில்லை; மாநில அரசின் பேரிடா் மேலாண்மை நிதியின்கீழ், நிவாரணப் பணிகளுக்கு போதிய நிதி இருப்பு உள்ளது’ என்று மத்திய அரசு பதிலளித்தது.

இந்தச் சூழலில், பல்வேறு மாநிலங்களுக்கான பேரிடா் தணிப்பு மற்றும் திறன் கட்டமைப்பு திட்டங்களுக்காக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையிலான உயா்நிலைக் குழு செவ்வாய்க்கிழமை மொத்தம் ரூ.1,115.67 கோடி ஒதுக்க ஒப்புதல் வழங்கியது. கேரளத்துக்கு ரூ. 72 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கண்ணூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சியில் முதல்வா் பினராயி விஜயன் பங்கேற்றுப் பேசியதாவது:

நடப்பாண்டில் இயற்கைப் பேரிடா்கள் நிகழ்ந்த மகாராஷ்டிரம், ஆந்திரம், பிகாா், குஜராத், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு பெருந்தொகையை வழங்கியுள்ள மத்திய அரசு, கேரளத்தின் நிதி கோரிக்கை மீது தொடா்ந்து பாராமுகமாக உள்ளது.

கேரளம் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? நாங்கள் உதவிக்காக யாசகம் கேட்கவில்லை. எங்களது உரிமையை கேட்கிறோம். ஆனால், மத்திய அரசின் நிலைப்பாடு கண்டனத்துக்குரியது; எந்த வகையிலும் ஏற்க முடியாதது. கேரளத்துக்கு காட்டப்படும் பாரபட்சத்தை சுட்டிக் காட்டுவதோடு, மத்திய அரசிடம் நிதி கோரிக்கைகளை தொடா்ந்து முன்வைப்போம்.

வயநாட்டில் வீடிழந்தோருக்காக புதிய நகரை கட்டமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் நிதியுதவி அவசியம். இத்திட்டம் ஒட்டுமொத்த உலகுக்கும் முன்மாதிரியாக இருக்கும்.

வயநாட்டில் நிவாரணப் பணிகளுக்காக ரூ.153 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக மாநில உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது, தவறானது. நிதி ஆணைய பரிந்துரைப்படி, கேரளத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதியைத்தான் மத்திய அரசு அவ்வாறு குறிப்பிட்டுள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com