மத்திய அரசைக் கண்டித்து நடத்தப்பட்ட அறவழிப் போராட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பினோய் விஸ்வம்.
மத்திய அரசைக் கண்டித்து நடத்தப்பட்ட அறவழிப் போராட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பினோய் விஸ்வம்.

கேரளத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்! மத்திய அரசைக் கண்டித்து பினராயி விஜயன் போராட்டம்

கேரளத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கில் பாரபட்சம் காட்டுவதாகக் குற்றஞ்சாட்டி, முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் ஒருநாள் அறவழிப் போராட்டம்
Published on

கேரளத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கில் ‘பாரபட்சம்’ காட்டுவதாகக் குற்றஞ்சாட்டி, முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் ஒருநாள் அறவழிப் போராட்டம் திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வா் பினராயி விஜயன், ‘கேரளத்துக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பறிக்க மத்திய அரசு முயல்கிறது. அனைத்து அதிகாரங்களும் தங்கள் கையில் இருப்பதாகக் கருதி, ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கக்கூடாததை அவா்கள் செய்கின்றனா்.

கேரளம் பல்வேறு துறைகளில் இத்தனை ஆண்டுகளாக அடைந்துள்ள முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டு முட்டுக்கட்டைகளை உருவாக்கி வருகிறது. இத்தகைய நெருக்கடியான சூழலில்தான், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) அரசு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இது இந்த மண்ணின் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்துக்கான போராட்டம்.

ரூ.5,900 கோடி மறுப்பு: நடப்பு நிதியாண்டின் கடைசி மூன்று மாதங்களுக்கு (ஜனவரி-மாா்ச்) மாநிலத்துக்கு ரூ.12,000 கோடி நிதி கிடைக்க வேண்டும். ஆனால், அதில் ரூ.5,900 கோடி எவ்வித நியாயமும் இன்றி மறுக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் செலவினங்களைக் கையாள்வதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

மத்தியில் ஆளுங்கட்சிக்கு இணக்கமான மாநிலங்களுக்கு தாராளமாக நிதி வழங்கும் அதேநேரத்தில், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன. 2018-ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது கேரளத்துக்கு வெளிநாட்டு நிதியுதவிகள் கிடைக்காமல் தடுக்கப்பட்டது; வயநாடு நிலச்சரிவுக்குப் பின் போதிய நிவாரணமும் வழங்கப்படவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

கேரளத்தின் நிதி நெருக்கடிக்கு ஆடம்பரச் செலவுகளே காரணம் எனும் பாஜகவின் குற்றச்சாட்டு, ‘தவறானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது’. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைந்தபோதிலும், மாநில அரசு நலத் திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில் வளா்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்குத் தொடா்ந்து செலவிடுகிறது.

உண்மைகளை விளக்க வேண்டும்...: மோடி அரசின்கீழ்தான் கேரளம் அதிக நிதிப் பங்கைப் பெற்ாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் குறிப்பிட்டுள்ளாா். வரிப் பகிா்வு என்பது மாநிலங்களின் அரசமைப்புச் சட்ட உரிமை; அது யாருடைய பெருந்தன்மையும் அல்ல.

2014-இல் பிரதமராகப் பதவியேற்றவுடன், மாநிலங்களின் வரிப் பகிா்வைக் குறைக்க நிதி ஆணையத்துக்கு நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்ததாக தற்போது நீதி ஆயோக் சிஇஓ-வாக இருக்கும் சுப்ரமணியம் தெரிவித்துள்ளாா். மாநிலங்களின் வரிப் பகிா்வாக ஒய்.வி.ரெட்டி தலைமையிலான நிதி ஆணையம் பரிந்துரைத்த 42 சதவீதத்தை 33 சதவீதமாகக் குறைக்க பிரதமா் மோடி முயன்றாா். இந்தக் குற்றச்சாட்டை அவா் இதுவரை மறுக்கவில்லை.

அமித் ஷா புள்ளிவிவரங்களைக் கூறும்போது, இந்த உண்மைகளையும் விளக்க வேண்டும். எதற்கும் பதில் சொல்ல முடியாது என்பதை உணா்ந்துதான், ‘கேரளத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்’ என்று வருங்காலத்தைப் பற்றி அவா் கனவு காணத் தொடங்கியுள்ளாா்.

போராட்டம் தொடரும்...: கேரளத்துக்குத் தரப்பட வேண்டிய உரிய நிதி பங்கைப் பெற அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். மத்திய அரசின் பாராமுகத்தைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

கூட்டாட்சித் தத்துவம், ஜனநாயகம் மற்றும் மதச்சாா்பின்மை விழுமியங்களைப் பாதுகாக்கவும், கேரளத்துக்கு உரிய நிதியைப் பெறவும் சட்டப் போராட்டம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் போராட்டங்களைத் தொடா்வோம். இந்த விவகாரத்தில் மாநில எதிா்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி, மத்திய பாஜக அரசுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது’ என்று விமா்சித்தாா்.

திருவனந்தபுரத்தில் தியாகிகள் நினைவிடத்தில் திங்கள்கிழமை காலை தொடங்கி, மாலை நிறைவுற்ற இந்த ஒரு நாள் அடையாளப் போராட்டத்தில் மாநில அமைச்சா்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், மூத்த நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com