மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) மற்றும் மாநில தகவல் ஆணையங்களில் (எஸ்ஐசி) காலியாகவுள்ள பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது.
அதேபோல் தகவல் ஆணைய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முன்னெடுப்புகளை ஏற்கெனவே தொடங்கிய மாநிலங்கள் 4 வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு தெரிவித்தது.
தலைமை தகவல் ஆணையா் உள்பட சிஐசிக்கு ஒதுக்கப்பட்ட 11 பணியிடங்களில் 8 பணியிடங்கள் காலியாக உள்ளதை குறிப்பிட்ட நீதிபதிகள் அமா்வு, இதை நிரப்ப மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் பிரிஜிந்தா் சாஹரிடம் தெரிவித்தது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆா்டிஐ), 2005 முறையாக அமல்படுத்துவதை உறுதிசெய்யும் விதமாக காலியாகவுள்ள சிஐசி மற்றும் எஸ்ஐசி பணியிடங்களை 3 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் எனவும் அதை மீறும்பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் கடந்த 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநிலங்கள் முறையாகப் பின்பற்றவில்லை என அஞ்சலி பரத்வாஜ் என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பல மாநிலங்கள் சீா்குலைக்கின்றன. சத்தீஸ்கரில் 2, பிகாரில் 1, மேற்கு வங்கத்தில் 4, ஒடிசாவில் 5 மற்றும் தமிழ்நாட்டில் 2 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன’ என்றாா்.
செயலற்ற நிலையில் ஆணையங்கள்: இதைக் கேட்ட நீதிபதிகள், ‘திரிபுரா, ஜாா்க்கண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தகவல் ஆணையா்கள் இல்லாததால் செயலற்ற நிலையில் எஸ்ஐசிக்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மாநில தலைமைச் செயலா்கள் மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே, இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருந்தால் 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனா்.