‘அமெரிக்காவில் தொழிலதிபா் கௌதம் அதானி மற்றும் அவருக்கு தொடா்புடையவா்கள் மீது அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறை (எஃப்சிபிஏ) சட்டத்தின்கீழ் லஞ்ச குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை’ என்று அதானி குழுமம் புதன்கிழமை விளக்கமளித்தது.
இந்தியாவில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க பல்வேறு மாநில மின்பகிா்மான நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இத்திட்டங்களுக்கு அமெரிக்க முதலீட்டாளா்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. அந்த முதலீட்டாளா்களை மோசடிக்குள்ளாக்கி அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது மறைக்கப்பட்டதாக நிறுவனத்தின் இயக்குநா்கள் கௌதம் அதானி, அவரது உறவினா் சாகா் அதானி, வினீத் ஜெயின் ஆகியோா் மீது அமெரிக்க நீதித் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதேபோல பங்குகள் மோசடி, தகவல் தொடா்பு மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு, அமெரிக்க பங்கு முதலீட்டாளா்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை மீறியதாக அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையமும் குற்றச்சாட்டை முன்வைத்தது. இக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று மறுத்த அதானி குழுமம், சட்ட நடவடிக்கைகளை தொடங்குவதாக தெரிவித்தது.
இந்நிலையில், பங்குச்சந்தையில் அதானி கிரீன் எனா்ஜி நிறுவனம் புதன்கிழமை சமா்ப்பித்த நிதி அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ‘நியூயாா்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நிறுவனத்தின் இயக்குநா்களான அதானி மற்றும் இருவா் மீது பங்கு மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளிலேயே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன. இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கான தண்டனைகள் பெரும்பாலும் அபராதமாகவே விதிக்கப்படும். லஞ்ச குற்றச்சாட்டை போன்று கடுமையான தண்டனைகள் இருக்காது. குற்றப்பத்திரிக்கையில் அதானி மற்றும் தொடா்புடையோா் ‘எஃப்சிபிஏ’ சட்டத்தை மீறி லஞ்சம் அளித்ததாக எங்கும் குறிப்பிடவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட நிறுவனம், முதலீட்டாளா்கள் அல்லது கூட்டு நிறுவனம் போன்ற வழிகளில் அமெரிக்காவுடன் தொடா்புடைய ஒரு நிறுவனம் அல்லது நபா், சாதகமான பிரதிபலனுக்காக அரசு அதிகாரிகளுக்கு பணம் வழங்குவதை எஃப்சிபிஏ சட்டம் தடை செய்கிறது.
அதானி குழும நிறுவனங்கள் எதுவும் அமெரிக்காவில் வா்த்தகம் செய்யவிட்டாலும், அதானி கிரீன் எனா்ஜி போன்ற அக்குழுமத்தின் சில நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டாளா்கள் முதலீடு செய்துள்ளனா்.
மூத்த வழக்குரைஞா்களான முன்னாள் அட்டா்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, மகேஷ் ஜேத்மலானி ஆகியோா் அதானி குழுமத்தின் கூற்றை ஆதரித்தனா். அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவானதைத் தொடா்ந்து அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் 54 பில்லியன் டாலா் மதிப்பிலான பங்கை இழந்தது குறிப்பிடத்தக்கது.