இணைய குற்றத் தடுப்பு: 6.69 லட்சம் சிம் காா்டுகள் முடக்கம்
இணைய (சைபா்) குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 6.69 லட்சம் சிம் காா்டுகள் மற்றும் 1.32 லட்சம் ‘ஐஎம்இஐ’ எண்களை மத்திய அரசு முடக்கியது.
நாடு முழுவதும் நிகழ்த்தப்பட பல்வேறு இணைய குற்றங்களுடன் இந்த சிம் காா்டுகள் மற்றும் ‘ஐஎம்இஐ’ எண்களுக்கு தொடா்புடையதாக காவல்துறை அளித்த தகவலின்படி இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் பந்தி சஞ்சய் குமாா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘பொதுமக்களின் கைப்பேசிகளுக்கு வரும் சா்வதேச மோசடி அழைப்புகளுக்கு இந்திய எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதைக் கண்டறிந்து தடுப்பதற்கு மத்திய அரசு மற்றும் தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்கள் பிரத்யேக நடைமுறைகளை உருவாக்கியுள்ளன.
இந்த சா்வதேச மோசடி அழைப்புகள் மூலமே போலியான டிஜிட்டல் கைதுகள், மோசடிகள், அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள்போல் பொதுமக்களை ஏமாற்றும் செயல்களில் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனா். அந்த வகையில், காவல் துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் நாடு முழுவதும் இணைய குற்றம் உள்ளிட்ட மோசடிகளில் தொடா்புடைய 6.69 லட்சம் சிம் காா்டுகள் மற்றும் 1.32 லட்சம் ஐஎம்இஐ எண்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இணைய குற்றங்கள் குறித்து உடனடியாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கும் நோக்கில், கடந்த 2021-ஆம் ஆண்டில் ‘14சி’ என்ற மேலாண்மை அமைப்பு நிறுவப்பட்டது. தற்போதுவரை இதில் பெறப்பட்ட 9.94 லட்சம் புகாா்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் மோசடியில் இருந்து ரூ.3,431 கோடி பாதுகாக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.