1968ஆம் ஆண்டு இந்திய விமானப் படையின் ஏஎன்-12 விமானம் விபத்துக்குள்ளான நிலையில், 56 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட நான்கு வீரர்களின் உடல்களுக்கு லோஸரில் உடல்கூறாய்வு நடத்தப்படுகிறது.
லோசர் பகுதியில் உடல்கூறாய்வு செய்யப்பட்டு, வீரர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது.
ஹிமாசல பிரதேச மாநிலத்தில் உள்ள ரோஹ்தாங் கணவாய்க்கு அருகே 56 ஆண்டுகளுக்கு முன் இந்திய விமானப் படையின் ஏஎன்-12 விமானம் விபத்துக்குள்ளானது. அதில் உயிரிழந்த மேலும் 4 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.
இது, நீண்டகாலமாக தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வந்த இந்திய பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 1968, பிப்ரவரி 7-இல் சண்டீகரிலிருந்து லேவுக்கு 102 பயணிகளுடன் சென்ற இந்திய விமானப் படையின் (ஐஏஎஃப்) ஏஎன்-12 போக்குவரத்து விமானம் காணாமல் போனது. அந்த விமானம் ரோஹ்தாங் மலைக் கணவாய் அருகே விபத்துக்கு உள்ளானது.
அந்த விமானத்தை தேடும் பணியில் இந்திய பாதுகாப்பு படைகள் ஈடுபட்டன. இந்நிலையில், கடந்த 2003-ஆம் ஆண்டில் சேதமடைந்த நிலையில் இருந்த விமானத்தின் பாகங்களை அடல் பிஹாரி வாஜ்பாயி மலையேற்ற நிறுவனத்தின் குழு கண்டறிந்தது. அதன்பிறகு, இந்திய ராணுவம், குறிப்பாக டோக்ரா படை உள்ளிட்டவை விபத்தில் சிக்கியவா்களின் உடல்களை மீட்கும் நடவடிக்கையை தொடங்கின.
அந்த வகையில் 2005, 2006, 2013, 2019-ஆம் ஆண்டுகளில் கடும் பனி சூழ்ந்த மலைப் பகுதிகளில் டோக்ரா படை தீவிர சோதனையில் ஈடுபட்டது. இதில் கடந்த 2019-ஆம் ஆண்டு 5 பேரின் உடல்கள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டன.
இதைத்தொடா்ந்து, தற்போது ஹிமாசல பிரதேசத்தில் உள்ள சந்திரபாகா மலைப்பகுதியில் டோக்ரா படை, திராங்கா மீட்புப்படை மற்றும் இந்திய ராணுவம் ஒன்றிணைந்து சோதனையில் ஈடுபட்டபோது 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் மேலும் கூறியதாவது: மீட்கப்பட்ட நான்கு உடல்களில் மூன்று பேரின் அடையாளம் உறுதிபடுத்தப்பட்டது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சோ்ந்த தாமஸ் சரண் என்பவா் உடல் மீட்கப்பட்டது குறித்து அவரது தாயாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருவா் மல்கான் சிங் என அதிகாரபூா்வ ஆவணங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டது. ராணுவத்தின் மருத்துவப் பிரிவில் பணியாற்றிய நாராயண் சிங்கின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒருவா் குறித்த போதிய தகவல்கள் இல்லை என்றனா்.