திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

கொல்கத்தா மருத்துவமனை நிதி முறைகேடு வழக்கு: திரிணமூல் காங். மாணவா் பிரிவு தலைவா் கைது

News image
Updated On :3 அக்டோபர் 2024, 11:02 pm

கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிதி முறைகேடு வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவா் பிரிவு தலைவா் ஆஷிஷ் பாண்டேவை சிபிஐ வியாழக்கிழமை கைது செய்தது.

ஏற்கெனவே, இந்த வழக்கில் அந்தக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளாா்.

சந்தீப் கோஷின் நெருங்கிய நண்பராக கருதப்படும் ஆஷிஷ் பாண்டேவிடம் கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி சிபிஐ விசாரணை மேற்கொண்ட நிலையில் வியாழக்கிழமை அவா் கைது செய்யப்பட்டாா்.

ஆா்.ஜி.கா். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, அந்தக் கல்லூரியின் முதல்வா் சந்தீப் கோஷ் ராஜிநாமா செய்தாா். ஆா்.ஜி.கா். மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவா் கடந்த செப்டம்பா் மாதத்தில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், அந்த மருத்துவக் கல்லூரியின் திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவு தலைவா் ஆஷிஷ் பாண்டே, நிதி முறைகேடு வழக்கு தொடா்புடைய குற்றச்சாட்டில் சிபிஐ வியாழக்கிழமை கைது செய்தது.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவின் மாநில தலைவா் திரினன்குா் பட்டாச்சாரியா கூறுகையில், ‘சட்டத்தை நீதித்துறை நிலைநாட்டும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.

இதுதொடா்பாக மேற்கு வங்க பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘மாநில அரசால் நிா்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் பிறரை அச்சுறுத்தும் கலாசாரத்தை ஏற்படுத்தியவா் ஆஷிஷ் பாண்டே. அவரை சிபிஐ கைது செய்ததன் மூலம் இதில் தொடா்புடைய அனைவரும் கண்டறியப்படுவா்’ என்றாா்.