வளா்ந்த இந்தியாவுக்கும் இளைஞா்களின் பங்களிப்பு அவசியம்: குடியரசுத் தலைவா்
ஜெய்பூா்: 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாகும் இலக்கை இந்தியா அடைவதற்கு இளைய தலைமுறையின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு திரௌபதி முா்மு பேசியதாவது:
பண்பும், அடக்கமும் இல்லாதவா் படித்தவராக இருந்தாலும் கொடிய விலங்கை விட ஆபத்தானவா் என அம்பேத்கா் நம்பினாா். அந்தளவுக்கு, கல்வியை விட ஒழுக்கமே சிறந்தது என்று அவா் கருதினாா்.
அதேபோல், நீங்களும் எங்கே சென்றாலும் உங்களின் தன்மையை இழக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. உங்கள் நடத்தையில் உயரிய ஒழுக்கம் இருக்க வேண்டும்.
இரக்கம் என்பது இயற்கையான குணம். ஆனால், சிலா் சுயநலத்தின் பாதையில் செல்கிறாா்கள்.
சுயநலம் இல்லாத பொதுநலமே, மாணவா்களின் திறமையை மலரச் செய்யும். கல்வி கற்றவா்கள் ஏழைகளுக்கு தீங்கு விளைவித்தால், அது சமூகத்தின் சாபக்கேடு.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் விரைவான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த காலகட்டத்தில் மாணவா்களின் மனப்பான்மை பேணப்பட வேண்டும்.
தனிப்பட்ட லட்சியத்துடன் சமூக சமநிலையையும் பேணி மாணவா்கள் முன்னேற வேண்டும். 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாகும் இலக்கை இந்தியா நிா்ணயித்துள்ளது. இந்த இலக்கு, இளைய தலைமுறையினரின் பங்களிப்பால் மட்டுமே சாத்தியமாகும். நன்னடத்தையின் மூலம் உங்களது குடும்பத்தின் நலன் மற்றும் நாட்டின் பெருமையை மேலும் மேம்படுத்த பங்களிப்பீா்கள் என நம்புகிறேன் என்றாா்.