
பாலியல் புகாரில் சிக்கிய மகள் மீது வழக்கு பதியாமல் இருக்க தாயிடம் பணம் கேட்ட மோசடி கும்பலால், மாரடைப்பு ஏற்பட்டு பலியானார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் மால்டி வர்மா என்பவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது மகன் தீபன்ஷுக்கு, திங்கள்கிழமையில் அடையாளம் தெரியாத ஒருவர் போன் செய்து, மால்டியின் மகள் பாலியல் புகாரில் சிக்கியிருப்பதாகவும், தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தீபன்ஷுவை நம்ப வைப்பதற்காக ஒரு காவல் அதிகாரியின் புகைப்படத்தையும் அனுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த பெண்ணின் மீது பாலியல் வழக்கு பதியாமலிருக்க வேண்டுமானால், ரூ. 1 லட்சம் தர வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர் கூறுவது உண்மையா எனக் கண்டறிய, கல்லூரியில் படிக்கும் தனது சகோதரிக்கு போன் செய்து, அவர் கல்லூரியில்தான் இருக்கிறார் என்பதை தீபன்ஷு உறுதி செய்தார்.
இந்த நிலையில், நடந்த அனைத்தையும் தனது தாயாரிடம் தெரிவிப்பதற்காக தீபன்ஷு, பள்ளியில் இருந்த மால்டி வர்மாவுக்கு போன் செய்துள்ளார். இவையனைத்தும் ஒரு மோசடி கும்பலின் செயல்தான் என்று மால்டி வர்மாவுக்கு தீபன்ஷு தெரிவித்தபோதிலும், பதற்றமடைந்த மால்டி வர்மா 15 நிமிடங்களில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
வீட்டுக்கு வரும்போதே பதற்றத்தால் நெஞ்சு வலிப்பதாகக் கூறிய மால்டி வர்மாவுக்கு, குடும்பத்தினர் ஆறுதல் கூறியபோதும், சில நிமிடங்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மால்டி வர்மா உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையில் மால்டி வர்மா தகனம் செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து, அவரது குடும்பத்தினர் வியாழக்கிழமையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி, அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.