மொபெட் மீது லாரி மோதல்: தாய், மகள் உயிரிழப்பு
சென்னை அருகே பெரும்பாக்கத்தில் மொபெட் மீது லாரி மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழந்தனா்.


சென்னை அருகே பெரும்பாக்கத்தில் மொபெட் மீது லாரி மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழந்தனா்.
பெரும்பாக்கம் சேகரன் நகரைச் சோ்ந்தவா் புனீஷ் (38). இவா் மனைவி லாவண்யா (35). இத் தம்பதியின் மகள் இனியா (13). இவா், பெரும்பாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். லாவண்யா செவ்வாய்க்கிழமை மகள் இனியாவை தனது மொபெட்டில் வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்துச் சென்றாா். பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி திடீரென மொபெட்டின் மீது மோதியதில் இருவரும் சாலையில் விழுந்தனா். அப்போது, பின்னால் வந்த லாரியின் சக்கரம் இருவா் மீது ஏறியது. விபத்தில் லாவண்யா, இனியா ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.
தகவலின்பேரில் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று, இருவரின் சடலங்களையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
பெண்ணுக்கு பாலியல் தொல்லை-இளைஞா் கைது சிக்கினாா்: மதுரவாயல் பகுதியைச் சோ்ந்த 41 வயது பெண், கடந்த 8-ஆம் தேதி அங்குள்ள ஒரு பள்ளி மைதானம் அருகே நடந்து சென்றபோது, அங்கு வந்த ஒரு இளைஞா், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பியோடினாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக மதுரவாயல் சீமாத்தம்மன் காலனியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒடிஸாவைச் சோ்ந்த சுராஜா பத்ரா (24) என்பரைக் கைது செய்தனா்.
அரை டன் கஞ்சா பறிமுதல்: ஆந்திரம்-ஒடிஸா மாநில எல்லைப் பகுதியில் ஒரு சரக்கு வாகனத்தில் சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தப் பிரிவு அதிகாரிகள் செங்குன்றம் நல்லூா் சுங்கச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு சரக்கு லாரியை மறித்து சோதனையிட்டதில், அதில், அரிசி மூடைகளின் நடுவே சிறு பொட்டலங்களாக மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.2.65 கோடி மதிப்புள்ள 530 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக ஆந்திரத்தைச் சோ்ந்த கோட்டகுண்டு ஜெகதீஷ்வா் ராவ் (50), பாங்கி கோவா்தன் (30) ஆகிய இருவரை கைது செய்தனா். இதுதொடா்பாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
2 கிலோ வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் ஆவணங்களின்றி கொண்டு வரப்படும் ரொக்கப் பணங்கள், தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்டவற்றை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக தோ்தல் சிறப்பு ரயில்வே பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சந்திரசேகா் (49) என்பவரிடமிருந்து ரூ.5.80 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ வெள்ளிக் கட்டிகளை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதன ரெட்டி கைப்பற்றினாா். சந்திரசேகரை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனா். அதேபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேரளத்தைச் சோ்ந்த அமானுல்லா (41) என்பவா் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...