துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நடிகர் கோவிந்தா எப்படி இருக்கிறார்? டிஸ்சார்ஜ் எப்போது?

ஹிந்தி நடிகரும் சிவசேனை கட்சியின் உறுப்பினருமான கோவிந்தாவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் தகவல் அளித்துள்ளனர்.
 நடிகரும் சிவசேனை கட்சியின் உறுப்பினருமான கோவிந்தா
நடிகரும் சிவசேனை கட்சியின் உறுப்பினருமான கோவிந்தா
Published on
Updated on
1 min read

பிரபல ஹிந்தி நடிகரும் சிவசேனை கட்சியின் உறுப்பினருமான கோவிந்தா காலில் தோட்டா பாய்ந்து படுகாயமடைந்தாா். பின்னர், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சையளித்து தோட்டாவை அகற்றினா்.

60 வயதாகும் கோவிந்தாவுக்கு செவ்வாய்க்கிழமை அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.

கோவிந்தாவின் இடது முட்டிக்குக் கீழ் 8-10 தையல் போடப்பட்டுள்ளது என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்சார்ஜ் எப்போது?

இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறியதாவது:

அவர் தற்போது முன்பைவிட ஓரளவுக்கு தேறியிருக்கிறார். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படவிருக்கிறார். 6 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். நிற்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்.

ஆனால், நலமுடன்தான் இருக்கிறார். சில நாள்களில் நடனம் ஆடுவார். அவருக்காக பலரும் வேண்டினார்கள். எங்களுக்கு மாதா ராணியின் ஆசிர்வாதம் இருக்கிறது.

6 வாரம் ஓய்வெடுக்க உள்ளதால் யாரும் அவரைப் பார்க்க முடியாது. தொற்று ஏற்படுமென்பதால் அவரைப் பார்க்க முடியாது எனக் கூறினார்கள்.

யார் இந்த கோவிந்தா?

1980-ஆம் ஆண்டுகளின் இறுதி மற்றும் 1990-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ‘பாலிவுட்’ திரையுலகின் பிரபலமான நடிகராக வலம் வந்தவா் கோவிந்தா. இதுவரை 165-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளாா். கடைசியாக கடந்த 2019-இல் வெளியான ரங்கீலா ராஜா படத்தில் நடித்திருந்தாா்.

இதற்கிடையே 2004 மக்களவைத் தோ்தலில் வடக்கு மும்பை தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வென்ற கோவிந்தா, 2008-ஆம் ஆண்டு அரசியலில் இருந்து விலகினாா்.

மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக கடந்த மாா்ச் மாதத்தில், மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணைந்து அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது எப்படி?

நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து கொல்கத்தாவுக்கு காலை 6 மணி விமானத்தில் நடிகா் கோவிந்தா செவ்வாய்க்கிழமை புறப்படவிருந்தாா்.

இதையொட்டி மும்பை விமான நிலையத்துக்கு ஜுஹு பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து நடிகா் கோவிந்தா புறப்படுவதற்கு முன்பு, உரிமம் பெற்ற தனது சொந்த துப்பாக்கியைப் பாதுகாப்பாக அலமாறிக்குள் வைத்துள்ளாா்.

அதிகாலை 4.45 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின்போது துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் அதன் தோட்டா நடிகா் கோவிந்தாவின் காலில் பாய்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விவகாரம் தொடா்பாக யாரும் புகாா் அளிக்கப்படவில்லை என்றாலும் விசாரணையைத் தொடங்கியிருப்பதாக மும்பை காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com