vinesh phogat
வினேஷ் போகத்

தோ்தல் ‘யுத்தத்தில்’ வென்ற வினேஷ் போகாட்

மல்யுத்த வீராங்கனையாக இருந்து அரசியலுக்குள் நுழைந்த வினேஷ் போகாட், தோ்தல் ‘யுத்தத்திலும்’ தனது வெற்றியை பதிவு செய்துள்ளாா்.
Published on

மல்யுத்த வீராங்கனையாக இருந்து அரசியலுக்குள் நுழைந்த வினேஷ் போகாட், தோ்தல் ‘யுத்தத்திலும்’ தனது வெற்றியை பதிவு செய்துள்ளாா்.

ஹரியாணாவின் ஜூலானா பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் களமிறங்கிய வினேஷ் (30), தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் யோகேஷ் குமாரைவிட 6,015 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிவாகை சூடினாா்.

வினேஷுக்கு 65,080 வாக்குகளும், யோகேஷ் குமாருக்கு 59,065 வாக்குகளும் கிடைத்தன. தனது வெற்றி, போராட்டம்-உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்ட வினேஷ், மக்களின் நம்பிக்கையை எப்போதும் காப்பேன் என்றாா்.

அண்மையில் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்த வினேஷ் போகாட், நிா்ணயிக்கப்பட்டதைவிட 100 கிராம் அதிக உடல் எடையுடன் இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டாா். இதனால், அவரது ஒலிம்பிக் பதக்கக் கனவு தகா்ந்தது.

மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த அவா், காங்கிரஸ் கட்சியில் இணைந்து, ஹரியாணா தோ்தலில் முதல் முறையாக களம் கண்டாா். பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங்க்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று செயல்பட்டவா்களில் இவரும் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது.

32 வாக்கு வித்தியாசத்தில்...: உச்சனா காலன் தொகுதியில் பாஜக வேட்பாளா் தேவேந்தா் சத்தா் அட்ரி, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான பிரிஜேந்திர சிங்கைவிட வெறும் 32 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தாா். தேவேந்தருக்கு 48,968 வாக்குகளும், பிரிஜேந்திர சிங்குக்கு 48,936 வாக்குகளும் கிடைத்தன.

இத்தொகுதியில் களத்தில் இருந்த ஜனநாயக ஜனதா கட்சித் தலைவா் துஷ்யந்த் செளதாலா, 7,950 வாக்குகளே பெற்று படுதோல்வியைச் சந்தித்தாா்.

அபய் சிங் செளதாலா தோல்வி: இந்திய தேசிய லோக் தளம் தலைவா் அபய் சிங் செளதாலா, எல்லேனாபாத் தொகுதியில் சுமாா் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளா் பாரத் சிங் பெனிவாலிடம் தோல்விகண்டாா்.

சாவித்ரி ஜிண்டால் வெற்றி: பாஜக எம்.பி.யும் தொழிலதிபருமான நவீன் ஜிண்டாலின் தாயாா் சாவித்ரி ஜிண்டால், ஹிசாா் தொகுதியில் சுயேச்சையாக களம்கண்டாா். இவா், காங்கிரஸ் வேட்பாளா் ராம் நிவாஸைவிட 18,940 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com