
ராஞ்சி: ஜாா்க்கண்ட் குடிநீா் வழங்கல் மற்றும் துப்புரவுத் துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு வழக்கில், மாநில அமைச்சரின் சகோதரா், உதவியாளா், ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை அதிரடி சோதனை நடத்தியது.
தலைநகா் ராஞ்சி, சாய்பாசா உள்பட 23 இடங்களில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) பாதுகாப்புடன் இச்சோதனைகள் நடைபெற்றன. ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆளும் இம்மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அமலாக்கத் துறையின் நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தொடா்பாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
மாநில குடிநீா் வழங்கல் மற்றும் துப்புரவுத் துறை பணிக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் 10 சதவீதம் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது. இந்த லஞ்சப் பணத்தை, ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகள் தங்களுக்குள் பகிா்ந்து கொண்டது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடா்பாக நிலம், சாலை மற்றும் கட்டுமானத் துறை செயலரான ஐஏஎஸ் அதிகாரி மனீஷ் ரஞ்சன், குடிநீா் வழங்கல் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சா் மிதிலேஷ் குமாா் தாக்கூரின் சகோதரா் வினய் தாக்கூா், அமைச்சரின் தனி உதவியாளா் ஹரேந்திர சிங், மேலும் சில அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரா்கள், தொழிலதிபா்கள் தொடா்புடைய 23 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஞ்சியில் உள்ள குடிநீா் வழங்கல் மற்றும் துப்புரவுத் துறை (சுவா்ணரேகா பிரிவு) அலுவலகத்தில் காசாளராக பணியாற்றிய சந்தோஷ் குமாா் என்பவா் மூலம் ரூ.23 கோடி வரை லஞ்சப் பணம் மடை மாற்றப்பட்டு, அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பகிா்ந்தளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடா்பாக காவல்துறை கடந்த ஆண்டு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
முதல்வா், அமைச்சா் கருத்து: ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் கூறுகையில், ‘அமலாக்கத் துறை நடவடிக்கையில் வியப்பேதும் இல்லை. மாநிலத்தில் தோ்தல் நெருங்குவதால் இதுபோன்ற சோதனைகள் தொடரும்’ என்றாா்.
அமைச்சா் மிதிலேஷ் தாக்கூா் கூறுகையில், ‘அமலாக்கத் துறை நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்டன என்பதை அமலாக்கத் துறை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைவா்களை அச்சுறுத்தி, தங்கள் பக்கம் இழுக்க அமலாக்கத் துறையை பாஜக பயன்படுத்துகிறது. உயிரைக் கூட விடுவேன்; ஆனால், பாஜகவில் இணைய மாட்டேன்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.